சென்னை: ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெறும் புஜ்ஜி என்ற துள்ளல் இசையுடன் கூடிய பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் மோஷன் போஸ்டர், ரகிட ரகிட சிங்கிள் டிராக் பாடலைத் தொடர்ந்து தற்போது புஜ்ஜி என்ற வீடியோ பாடல் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியிடப்பட்டுள்ளது.
கோட்- சூட், தலையில் தொப்பி, முறுக்கு மீசையுடன் வெளிநாட்டு லொகேஷன்களில் இரவு ஒளி வெளிச்சத்தோடு நடனக்குழுவினரோடு தனுஷ் ஆடும் துள்ளல் பாடலாக இந்த புஜ்ஜி பாடல் அமைந்துள்ளது. சந்தோஷ் நாரயணன் இசையில் பாடலை அனிருத் பாடியுள்ளார்.
தனது காதலியை வர்ணித்து தனுஷ் ஆடிப் பாடும் இந்தப் பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் லைக்குகளை அள்ளிவிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ளார். படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போயுள்ளது.
இதையடுத்து இந்த ஆண்டில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்த ஜகமே தந்திரம், ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. அதே சமயம் படம் தொர்பாக நீண்ட நாள்களாக எந்த அப்டேட்களும் இல்லாமல் இருந்தன.
தீபாவளியை முன்னிட்டு முன்னணி நடிகர்கள் பலர் தங்களது படம் குறித்த புதிய அப்டேட்களை வரிசையாக வெளியிட்டு வந்த நிலையில், தற்போது தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் இரண்டாவது பாடல் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். பிரேவ் ஹார்ட், பென் ஹர், ஒன்டர் உமன் ஹாலிவுட் படங்களில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், கலையரசன்,செளந்தர்ராஜா, தேவன், வடிவுக்கரசி, சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள்.
இதையும் படிங்க: பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியான சாயிஷா