புரூஸ் லீயின் 80ஆவது பிறந்தநாள் இன்று, அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்...
1959ஆம் ஆண்டு முதல் புரூஸ் லீ அமெரிக்காவில் தற்காப்பு கலை வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். தான் கற்ற கலையில் வெவ்வேறு முயற்சிகள் செய்து புதிதான தற்காப்பு முறைகளை அறிமுகம் செய்தார். அதற்கு ஜுன்-ஃபன் குங்ஃபு என்று பெயரிட்டார். தற்காப்பு கலையில் இவ்வாறு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர், ஒரு கட்டத்தில் தன்னை அறிதல் பற்றி சிந்திக்கத் தொடங்கினார். தற்காப்பு கலையின் மூலமாக தன்னை வெளிக்கொண்டு வர நினைத்தார்.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, டாவோயிஸம், புத்த மத கோட்பாடுகளின் மூலமாக உத்வேகம் அடைந்தார். தற்காப்பு கலையில் தத்துவத்தை புகுத்தி புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சண்டையிடும் நாயகனாக மட்டும் பலரால் அறியப்படும் புரூஸ் லீ ஒரு ஆகச் சிறந்த தத்துவ ஞானியும் கூட.
‘உங்கள் மனதை வெற்றிடமாக்குங்கள். நீர் போல வடிவமற்று, உருவமற்று இருங்கள்’ இது புரூஸ் லீ கூறிய உன்னதமான மேற்கோள்களில் ஒன்று. அவர் திரைத்துறையின் உள்ளே வந்து சாதித்தது ஏராளம். அவரை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில அரிய செய்திகளும் உண்டு.
புரூஸ் லீக்கு பார்வைக் கோளாறு இருந்தது. இதனால் முதன்முதலாக காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தியவர் அவர்தான். பின்னாளில் அது தொந்தரவாக இருக்க, தனது புட்டிக் கண்ணாடிக்கு மாறிவிட்டார். புட்டிக் கண்ணாடியை அவர் தேர்ந்தெடுத்ததற்கும் ஒரு காரணம் உண்டு. அது அவர் ஆரம்ப காலங்களில் பயன்படுத்தியது, அதை அணியும்போது தான் எங்கிருந்து வந்தேன் என்பதை உணர்வதாக தெரிவித்திருக்கிறார்.
புரூஸ் லீ, முகமது அலியோடு ஒரு நாளாவது சண்டை போட வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார். முகமது அலியின் கால்கள் செயல்படும் வேகத்தை பார்த்து அவர் சில விஷயங்களை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் காலத்தின் கோலத்தால் அந்த சண்டை நடைபெறாமல் போனது.
தன் குருவான இப் மேனிடம் தனி வகுப்புகள் கற்றுக் கொள்வதற்காக சக மாணவர்களை பொய் சொல்லி வகுப்புக்கு வராமல் செய்யும் பழக்கமும் அவரிடம் இருந்தது. தெருவில் திரியும் குண்டர்களுடன் சண்டையிடுவது இப் மேனுக்கு பிடிக்காது. ஆனால், புரூஸ் லீ அந்த வேலையை சிறப்பாக செய்வார்.