பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'மெட்டி ஒலி' தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகர் போஸ் வெங்கட். தொடர்ந்து பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்த அவர், பாரதிராஜாவின் 'ஈரநிலம் படம்' மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2003ஆம் ஆண்டுக்குப் பிறகு 'சிந்தாமல் சிதறாமல்', 'தலைநகரம்' உள்ளிட்ட படங்களில் நடித்ததைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியான 'சிவாஜி' படம் மூலம் பிரபலமடைந்தார்.
வில்லன், குணச்சித்திர வேடங்களை மையமாக வைத்தே நடித்துவரும் போஸ் வெங்கட், 'சரோஜா', 'சிங்கம்', 'கோ', 'வை ராஜா வை', 'கவண்', 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே தற்போது இயக்குநராக அறிமுகமாகும் போஸ் வெங்கட், 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகனாக ஸ்ரீராம் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக காயத்ரி அறிமுக நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் தயாரித்துள்ளார். 'ஆடுகளம்' முருகதாஸ், கஜராஜன், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.