உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த இத்திரைப்படத்தில் கமலுடன் சேர்ந்து சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அரசு அலுவலகங்களில் உள்ள லஞ்சம் வாங்கும் அதிகாரிகளால் ஏற்படும் விளைவு பற்றி இப்படத்தில் ஆழமான கருத்துப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் கமல்-ஷங்கர் கூட்டணியில் தற்போது உருவாகிவருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இதில் சித்தார்த், விவேக், ரகுல் பீரித், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எனினும் இத்திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு இன்று வரை தெளிவாக வெளியிடப்படாமல் இருந்தது. மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், அக்ஷ்ய் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்தது என்று தகவல் வெளியானது.