"இந்தச் 'செக்கச்சிவந்த வானம்' 2018ல ரிலீஸ் ஆகிருக்கு, ஆனா 2013லயே ஒரு கொரியா கார பயபுள்ள, இந்தக் கதைய களவாண்டு 'நியூ வேர்ல்ட்' அப்படின்னு டைட்டில் வெச்சு, படத்தையே ரிலீஸ் பண்ணிப்புட்டாய்ங்க! 2018ல வந்த படத்த 2013லயே களவாண்டுருக்கான்னா, இந்தக் கொரியா கார பயபுள்ள எப்பேர்ப்பட்ட களவாணி பயலா இருந்துருப்பான்னு பாத்துக்கோங்க!" இப்படி மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த 'செக்கச்சிவந்த வானம்' திரைப்படத்தை கலாய்த்து விமர்சனம் செய்திருந்தார் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.
சமீபகாலமாக திரைப்படங்களின் விமர்சனங்கள் பெருகிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக சமூக வலைதளங்களும் விமர்சனங்களால் நிரம்பிக்கொண்டே செல்கிறது.
ஒரு திரைப்படத்திற்கு போகலாமா வேண்டாமா என மக்கள் முடிவு செய்ய முக்கிய வழிகாட்டியாக இருப்பதே திரைப்பட விமர்சனங்கள்தான். முக்கியமாக யூ ட்யூபில் பிரசாந்த், ப்ளூ சட்டை மாறன் போன்ற பிரபல விமர்சகர்களின் விமர்சனத்தை கேட்கவே தனிக்கூட்டம் இருக்கிறது. அதே சமயம் அவர்கள் மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளும் எண்ணிலடங்காதவை.