லாஸ் ஏஞ்சலிஸ்: 'அவெஞ்சர்ஸ்' சீரிஸ் படங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ப்ளாக் விடோ' படத்தின் புதிய ட்ரெய்லரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
'அவெஞ்சர்ஸ் தனது முதல் குடும்பம் இல்லை, அதற்கு முன்னதாக தனக்கொரு கதை இருக்கிறது' என்று ப்ளாக் விடோ முந்தைய டீசரில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ட்ரெய்லரில் ப்ளாக் விடோவாகத் தோன்றும் ஸ்கார்லெட் ஜோகான்சன் மற்றொரு ப்ளாக் விடோவும் தனது சகோதரியுமான ஃபுளோரன்ஸ் பக்கை சந்திக்கிறார்.
இதையடுத்து இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து எதிரிகளோடு சண்டையிடும்விதமாக 2 நிமிடம் 23 விநாடிகள் ஓடும் ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது.
மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் 'அவெஞ்சர்ஸ்' சீரிஸ் படங்களுக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ள நிலையில், அந்தப் படங்களில் இடம்பெற்ற கேரக்டர்களை வைத்து அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், ப்ளாக் பாந்தர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், கேப்டன் மார்வல் என தனித்தனியே படங்கள் வெளியாகின. இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
ஒவ்வொரு 'அவெஞ்சர்ஸ்' கேரக்டர்களுக்கும் பின்னணி கதை சொல்லப்பட்ட நிலையில், படத்தின் சூப்பர் வுமன் ஹீரோயினாகத் தோன்றும் 'ப்ளாக் விடோ'-வின் பெயரில் தற்போது படம் தயாராகியுள்ளது. 'அவெஞ்சர்ஸ்' சீரிஸ் படங்களின் முக்கிய கேரக்டராகத் திகழும் பிளாக் விடோவின் பின்னணி கதை குறித்து இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
'ப்ளாக் விடோ' கதை மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இந்தப் படத்தின் புதிய ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.
தற்போது படத்தின் ஆங்கிலம், இந்தி ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமிழ்ப் பதிப்பு ட்ரெய்லரையும் வெளியிடவுள்ளனர்.
இதையும் படிங்க: 'அவெஞ்சர்ஸ்' என் முதல் குடும்பம் அல்ல - 'பிளாக் விடோ' நடாஷா