நடிகர் விஜய் - இயக்குநர் அட்லி மூன்றவாது முறையாக இணைந்துள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் பிகில் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது முதல் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரிசையாக வெளிவரத் தொடங்கின. அதன்படி தணிக்கைக் குழு பிகில் படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கியது என்றும், படத்தின் நீளம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதைத் தொடர்ந்து, படம் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் அச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், பிகில் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வெளியாகும் என்ற செய்தியால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த உற்சாகம் அடங்குவதற்குள் விஜய் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் விதமாக படத்தின் மற்றொரு புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. பிகில் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு விசில் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த விசில் திரைப்படத்தின் டிரைலரையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளதுதான் அந்த புதிய செய்தி.
விஜய் படத்திற்கு கேரளாவில் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள் என்பதால், அவரது ஒவ்வொரு படமும் அங்கு வெளியாவது வழக்கமான ஒன்றுதான். தெலுங்கிலும் விஜய் படங்கள் தற்போது டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது பிகிலும் இணைந்துள்ளது.