தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ் சினிமா பல்வேறு கட்டத்தைக் கடந்து டிஜிட்டல் உலகில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 10 படங்கள் வெளியாவதே கடினமாக இருந்தது அந்தக் காலம், தற்போது சரியான திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் ஒரு ஆண்டுக்க்கு 50க்கும் மேற்பட்ட படங்கள் கிடப்பில் கிடக்கின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள கரோனா சூழல், தமிழ்த் திரைப்படத் துறையினரை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த வேளையில், ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் OTTஇல் வெளியாகும் என்ற தகவல் தமிழ்த் திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதற்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கு ஆதரவு தெரிவித்தது. அதேபோல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில உருவாகியுள்ள பெண்குயின் திரைப்படமும் OTTஇல் வெளியாகிறது. அதன்படி ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் மே 29ஆம் தேதியும், 'பெண்குயின்' திரைப்படம் ஜூன் 19ஆம் தேதியும் அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 'பிகில்' பட தயாரிப்பாளர் அர்ச்சனா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "நிறைய பேர் என்னிடம் OTT வெளியீடு - திரைவெளியிடு குறித்து கேட்கின்றனர். நான் ஒரு போதும் எனக்குப் பிடிக்காதது குறித்து சிந்திப்பது கிடையாது. ஆனால், ஒரு நணயத்தில் இரண்டு பக்கங்கள் இருப்பதை நம்புகிறவள் நான். நாம் எல்லோரும் இந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றினைந்து ஒற்றுமையாக இருந்தால் நல்லதே நடக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.