பிக்பாஸ் 5ஆவது சீசன் தொடங்கி நேற்றுடன் (அக்டோபர் 7) மூன்று நாள்கள் நிறைவடைந்துவிட்டன. போட்டியாளர்களுக்கு முதல் டாஸ்க்காக தங்களை அறிமுகம் செய்துகொள்ளும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இசைவாணி, இமான் அண்ணாச்சி, சின்ன பொண்ணு ஆகியோர் தங்களது டாஸ்க்கை முடித்தனர்.
சரி வாங்க நேற்றைய எபிசோட்டில் என்ன நடந்து என்பதைப் பார்க்கலாம்...
'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திலுள்ள டூ டூ டூ பாடலோடு நேற்றைய எபிசோட்டில் பிக்பாஸ் நான்காவது நாள் தொடங்கியது. ஆளுக்கு ஒவ்வொரு மூலையில் நடனமாடி தங்களது நாளைத் தொடங்குகின்றனர்.
அபிஷேக் குழந்தைபோல் குடுமி போட்டுக்கொண்டுவருகிறார். அவரைப் பார்த்தவுடன் சின்ன பொண்ணு விபூதி வைக்க, உடனே அபிஷேக் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். (இதனைப் பார்த்த நெட்டிசன்கள்... வடிவேலுவின் மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் காலைப்பொழுதில் அவர் அம்மா காலில் விழுந்துவிட்டு, இரவு அம்மாவை அடிக்கும் காட்சியைப் போட்டு கலாய்த்தனர்)
பாவனியைக் கலாய்க்கும் அபிஷேக்
பாவனிக்கு 33 வயது ஆகுது, அதனால் அவர் வெளியே வந்தவுடன் கல்லூரி மாணவர்கள் யாரும் காதலிப்பதாகச் சொல்லக் கூடாது என அபிஷேக் கூறுகிறார்.
நமீதா அனுபவித்த வலிகள்
உண்மையான கதை சொல்லு டாஸ்க் நேற்றுதான் ஆரம்பித்தது என்றே சொல்லாம். ஆம்... நமீதா, தான் திருநங்கையாக மாறுவதில் தொடங்கித் தற்போது வரை எப்படிப் பயணிக்கிறேன் என்பதைத் தொடர்ந்து 20 நிமிடம் விவரித்தார். கண்கள் முழுவதும் கண்ணீர் வைத்துக்கொண்டு அவர் விவரிக்கும்விதம் கண்டிப்பாகப் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீர் வரவைத்திருக்கும்.
பயம், பாதுகாப்பின்மை, யாரை நம்புவது எனத் தெரியாமல் அவர் அனுபவித்த வலிகளைத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி மனநல காப்பகத்தில் மூன்று மாதங்கள் தங்கியதும், அங்குள்ள கம்பிகளைக் கையால் இரண்டு மாதமாகக் கழற்றி பின்னர் முயற்சி செய்து தப்பித்ததும் குறித்துப் பேசினார்.
எந்தக் குடும்பத்தால் தான் ஒதுக்கப்பட்டேனோ, அதே குடும்பத்தின் முன் ஒரு பெண்ணாக வாழ்ந்து முன்னேறிவருவதாக நமீதா மிகவும் பெருமையாகக் குறிப்பிடுகிறார். இதைக் கேட்ட சகப் போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீருடன் கைத்தட்டினர்.
இந்த 106 நாள் பிக்பாஸில், எங்களின் உரிமைகளையும், கோரிக்கைகளையும் அனைவரிடத்திலும் கேட்பேன் என மிக உணர்ச்சிகரமாகத் தெரிவித்தார் நமீதா. இவரின் வாழ்க்கைப் போராட்டத்தைக் கேட்ட மற்ற போட்டியாளர்கள் அனைவரும் எழுந்துநின்று கைத்தட்டி இதயம் எமோஜியை அவருக்கு ஒட்டினார்கள். போட்டியாளர்கள் மட்டுமல்ல; பார்வையாளர்களும் நமீதாவிற்கு சல்யூட் அடித்திருப்பார்கள். அந்த அளவிற்கு அவரின் வாழ்க்கைப் பயணம் மிகவும் துயரமாக இருந்தது.