'பிக் பாஸ்' வீட்டுக்குள் நுழையும் சனம் ஷெட்டி! - சனம் ஷெட்டி
சென்னை: 'பிக் பாஸ்' நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகை சனம் ஷெட்டி களம் இறங்க உள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே மூன்று சீசன்கள் நடந்துமுடிந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் நாளை (அக்.4) தொடங்கவுள்ளது.
வழக்கமாக ஜூன் மாதம் ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு, கரோனா ஊரடங்கு காரணமாக தாமதமாகியுள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் மாலை 6 மணிக்கும், மற்ற நாள்களில் இரவு 9.30 மணிக்கும் ஒளிப்பரப்பாகும்.
இந்த நிகழ்ச்சியில் 'மிஸ் சவுத் இந்தியா 2016' பட்டம் வென்ற மாடல் அழகியும், நடிகையுமான சனம் ஷெட்டி போட்டியாளர்களில் ஒருவராக களம் காண்கிறார்.
இவர் 'அம்புலி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.
கரோனா ஊரடங்கு காலத்தில், சாமானிய மக்களுக்கு உதவுவதற்கு 'நம் மக்களின் குரல்' என்ற சமூக நலத்திட்ட குழுவொன்றை தனது நண்பர்களோடு ஆரம்பித்து அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு ஏராளமான உதவிகளை சனம் ஷெட்டி செய்து வருகிறார்.
'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில், கலந்துகொண்ட போட்டியாளர் தர்ஷனுக்கும் இவருக்கும் இருந்த உறவு காரணமாக பல பிரச்னைகளை சந்தித்தார். அவற்றையெல்லாம் தனது மன வலிமையால் எதிர் கொண்ட இவர், பிக் பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்றும் தெரிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தன் மீது அவதூறாக வைக்கப்பட்ட சில விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பதோடு, தான் யார் என்பதையும் சனம் ஷெட்டி வெளிப்படுத்துவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.