பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி அதற்குள் ஒருவாரம் முடிந்துவிட்டது. எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை லாலா... என ஆடிப்பாடி சந்தோஷமாக இருந்த குடும்பத்திற்குள் உண்மையான கலவரம் தொடங்கும் நேரம் வந்துவிட்டது.
என்ன யோசிக்கிறீங்க... அட அதுதாம்பா இந்த வாரத்திலிருந்து நாமினேஷன் தொடங்குதுல! பிக்பாஸ் வீட்டில் நேற்று (அக். 11) இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்றன. ஒன்று தலைவர் போட்டிக்கான தேர்வு, மற்றொன்று முதல் நாமினேஷன். சரி, பிக்பாஸ் வீட்டில் எட்டாவது நாள் என்னென்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம் வாங்க மக்களே!
'வலி மாமே வலிப்... புளி மாங்கா புளிப்' என்ற பாடலுடன் எட்டாம் நாள் தொடங்கியது. பாட்டு சத்தம் கேட்டவுடன் வழக்கம்போல் போட்டியாளர்கள் தங்களது நாளை நடனத்துடன் தொடங்கினர்.
தாமரைக்குப் பாடம் எடுத்த பிரியங்கா
பிரியங்கா, இரவு ஆலோசனை வழங்கியதைக் கேட்டு, தாமரை செல்வி அப்போதுதான் பிக்பாஸ் விளையாட்டு என்றாலே என்ன என்று தெரிந்ததுபோல் ரியாக்ஷன் கொடுத்தார். (நம்புற மாதிரியா பாஸ் இருக்கு)
பின்னர் இமானிடம் சென்று பிரியங்கா சொன்ன பிறகுதான் எல்லாமே புரிந்தது என்றார். இனிமேதான் இந்தக் காளியோட ஆட்டத்தையே நீங்க பார்க்கப் போறீங்க என்ற அளவிற்கு இருந்தது அவரின் டயலாக் டெலிவரி. இமான் அண்ணாச்சி அதற்கு, 'நீ எப்போவும் இருக்கிற மாதிரியே இரு' எனக் கூற - அதற்கும் தலையை ஆட்டிவிட்டுச் சென்றார் தாமரை.
தலைவர் போட்டி
பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவர் போட்டிக்கான டாஸ்க் நடைபெற்றது. போட்டியாளர்களின் முதுகில் ஒரு பலூன் கட்டப்பட்டிருக்கும். பஸ்ஸர் அடிக்கும்போது, ஊசியை எடுத்து மற்றவர்களின் பலூனை உடைக்க வேண்டும். இறுதியாக யாருடைய பலூன் உடையவில்லையோ அவர்தான், இந்த வாரத் தலைவராகத் தேர்வுசெய்யப்படுவார் என பிக்பாஸ் தெரிவித்தார்.
பஸ்ஸர் அடித்தவுடன் நிரூப் ஓடிச்சென்று அனைவரையும் டார்கெட் செய்து பலூனை உடைத்தார். அவர்தான் தலைவராக வேண்டும் என்று நினைத்தாரா என்னவோ சோபாவின் மேலே பாய்ந்தெல்லாம் பலூனை உடைத்துக்கொண்டிருந்தார். (இவரைப் பார்த்தால் நமக்கு கடந்த சீசன் போட்டியாளர் பாலாஜிதான் நினைவுக்கு வருகிறார்).
இறுதியாக அவரே ஓடும்போது தனது பலூனை உடைத்துவிட, இறுதியாகத் தாமரைச் செல்வியும், சின்ன பொண்ணும் மட்டும் போட்டியில் இருந்தனர். அப்போது தாமரை செல்வி, 'நாடகமா, இசையா' பார்க்கலாம் வாங்க என அவரை டார்கெட் செய்தார்.