பிக்பாஸ் 7ஆவது நாள், கமல் ஹாசனின் புத்தகப் பரிந்துரையுடன் தொடங்கியது. உலக மனநல நாளை முன்னிட்டு நரம்பியல் மருத்துவ வல்லுநரான வில்லியனூர் ராமச்சந்திரன் எழுதிய ‘The Emerging Mind’ புத்தகத்தைப் பரிந்துரைசெய்தார் கமல்.
பிறகு அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்ற கமல் ஹாசன், வழக்கமாக நடக்கும் எலிமினேஷன் இந்த முறை கிடையாது என்றார். தொடர்ந்து வீட்டில் ஒருவாரம் நடைபெற்ற பணிகள் குறித்து கேட்டறிந்தார். முதல் வாரம் என்பதால் யாரைப் பற்றியும், யாரும் குறை சொல்லாமல் பாசிட்டிவ் (நேர்மறை) விஷயங்களை மட்டும் சொல்லி தப்பித்துவிட்டனர்.
இதைக் கேட்ட கமல் ஹாசனோ, 'அப்போ இங்க எதுவுமே பிரச்சினை இல்லை அப்படித்தானே. கன்ஃபெஷன் ரூம், கன்ஃப்யூஷன் ரூமாக மாறும்போது தெரியவரும்' என்று நக்கல் கலந்த சிரிப்புடன் முடிக்கிறார்.
படத்தையே அலசு அலசுனு ரிவ்யூ பண்ணும் அபிஷேக்கிடம், மனிதர்கள் பற்றி ரிவ்யூ சொல்லுங்கனு சொன்னா, அவர் சும்மா விடுவாரா! எழுந்து நின்று இசை வாணி முதல், சின்ன பொண்ணு வரை அனைவர் பற்றியும் அழகாக பாசிட்டிவான விஷயங்கள் குறித்து தெரிவித்தார்.
அனைவரையும் பற்றி மிகவும் ஜாலியாகச் சொன்ன அபிஷேக், பிரியங்கா, சின்ன பொண்ணு இருவர் பக்கம் வரும்போது, அம்மா, அக்கா நினைவுக்கு வருவதாகக் கூறி கண்ணீர் வடித்தார். ஒருவர் அழுதால், அவரைச் சென்று கட்டியணைத்து, சமாதானம் செய்வது வழக்கம் தானே. அதை இருவரும் சென்று செய்து, அபிஷேக்கை சமாதானம் செய்தனர். (ஆரம்பிச்சிட்டாங்கய்யா... அக்கா-தம்பி பாசத்தை)
அடுத்தாக லைக், டிஸ்லைக் கேம் மூலம் தனது நாரதர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார் பிக்பாஸ். (அது வேற எதுவும் இல்ல... எலிமினேஷனுக்கான படலம் தொடங்கப்போகிறதுபோல அதநாளதான் சின்னதா சிண்டு முடிச்சு விட்டுருக்காங்க)
முதல் நபராக அனைத்தையும் நான் வித்தியாசமாகத்தான் பார்ப்பேன் என்று சொல்லும் ராஜு வந்தார். அவர் நிரூப்புக்கு டிஸ்லைக்கும், அண்ணாச்சிக்கு லைக்கும் கொடுத்தார். தொடர்ந்து ஒவ்வொரு நபராக வந்த போட்டியாளர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு லைக்கும், பிடிக்காதவர்களுக்கும் டிஸ்லைக்கும் கொடுத்தனர்.