தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பரில் இயங்கிவருகிறது. சென்ற முறை நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வெற்றிபெற்று தலைவரானார். இதை எதிர்த்து மற்றோரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நடந்துமுடிந்த தேர்தலை ரத்துசெய்த நீதிமன்றம், புதிதாகத் தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே, விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்க நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு, நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள தனி அலுவலர் ஒருவர் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டார். இச்சூழலில், அடுத்த தேர்தலிலாவது ஒருமனதாக முடிவெடுத்து தலைவரைத் தேர்ந்தெடுக்க இயக்குநர் பாரதிராஜா கேட்டுக்கொண்டார். ஆனால், இரு அணிகளாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன் தற்போது தயாரிப்பில் ஈடுபட்டுவரும் தயாரிப்பாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு பாரதிராஜா தலைமையில், 'புதிய தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற பெயரில் சங்கம் உருவாக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.