தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர்கள் 30% சம்பளத்தை குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் - kollywood news

சென்னை: நடிகர்கள் தாங்கள் நடித்து வரும் படத்தின் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரதிராஜா
பாரதிராஜா

By

Published : Oct 19, 2020, 11:01 AM IST

Updated : Oct 19, 2020, 11:21 AM IST

கரோனா வைரஸ் காரணமாக அனைத்து துறையை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, சினிமா படப்பிடிப்பு இல்லாமல், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், நடிகர்கள் தாங்கள் நடித்து பாதியில் நிற்கும் படத்தின் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஓர் வேண்டுகோள். என் இனிய சொந்தங்களே.... வணக்கம். தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணிசெய்யுங்கள். திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும். கரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்கு கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும்.

அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கள் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டிப் பெருக்கம் இதெல்லாம் தயாரிப்பாளரின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ்சுமை. அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் என்பது உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்களின் இந்த கடினமான சூழ்நிலையை உணர்ந்து, ஏற்கெனவே சில நடிகர்கள் அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்ட சம்பளங்களிலிருந்து 30 சதவீதம் குறைத்துக்கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள். அவர்களை பாராட்டும் இந்த தருணத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா?

தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத்துறையில் அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தாமே முன்வந்து தங்களின் சம்பளங்களில் 30 முதல் 50 சதவீதத்தை விட்டுக்கொடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ் சினிமாவிலும் இதுநடக்கவேண்டாமா? எல்லோரையும் கேட்கவில்லை.

ரூபாய் பத்து லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறைந்தபட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களை முடித்துதருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள் வைக்கிறேன்.

பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை

இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது. அது நீங்கள் உங்கள் சம்பளங்களை பேசி ஒத்துவந்தால் வேலை செய்யப்போகிறீர்கள். ஆனால், முடிவடைய வேண்டிய படங்களுக்கு உங்கள் பங்களிப்பைக் கொடுத்து 30% சம்பளத்தை விட்டுக்கொடுத்து சினிமா உலகம் மீண்டெழ உதவ கேட்டுக்கொள்கிறேன். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் நீங்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். மீண்டெழ கைகள் கோர்ப்போம். சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் வாழவைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Oct 19, 2020, 11:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details