தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'புனித் ராஜ்குமாருக்கு பாரத ரத்னா'- நடிகர் சரத்குமார் உருக்கமான கோரிக்கை - புனித் ராஜ்குமார் நினைவேந்தல்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் கேட்டுக்கொண்டார்.

சரத்குமார்
சரத்குமார்

By

Published : Nov 16, 2021, 10:46 PM IST

Updated : Nov 16, 2021, 11:01 PM IST

பெங்களூரு: மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, கர்நாடக திரைப்பட வர்த்தகசபை சார்பில் இன்று (நவ.16) நினைவேந்தல் நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை (Basavaraj Bommai), அரசியல் கட்சியினர், திரையுலகினர் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் புனித் ராஜ்குமாரை கௌரவிக்கும் விதமாகக் கர்நாடக ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சரத்குமார், "புனித் ராஜ்குமார் மறைவை என்னால் ஏற்கமுடியவில்லை. அவருடன் இணைந்து படம் நடித்தபோது, அவரின் குணநலன் எனக்கு தெரியவந்தது. பூமியில் பிறந்த அனைவரும் மறைவது இயல்பான ஒன்று.

புனித் ராஜ்குமார் வாழ்கிறார்

ஒவ்வொரு மனிதரும் இறக்கும்போது ஏதோ ஒன்றை விட்டு செல்வார்கள். புனித் தனது நற்செயல்கள் மூலம் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். புனித் வாழ்க்கையை சாதாரண மக்களும் கடைப்பிடிப்பார்கள் என நம்புகிறேன்.

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது'. புனித் அந்த வாழ்க்கையை வாழ்ந்தவர். அவர் உயிரிழந்த பிறகும் ஒளி கொடுக்கிறார். அவருக்குக் கர்நாடகா அரசு மாநிலத்தின் உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை அறிவித்துள்ளது. அதற்கு முதலமைச்சருக்கு நன்றி.

பாரத ரத்னா வழங்க வேண்டும்

புனித் ஒவ்வொருவர் மனதிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவருக்கு பலரும் பத்மஸ்ரீ உள்ளிட்ட கௌரவங்களை அளித்துவருகின்றனர். நான் நினைக்கிறேன் ஏன் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்க கூடாது.

ஏனென்றால் அவர் ஒரு சிறந்த மனிதநேயர். ராஜ் குமாரின் குடும்பம் மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அவர் கண்களைத் தானமாக அளிப்பேன், உடல் உறுப்புகளைத் தானாக அளிப்பேன் என்று உறுதியளித்தார். அதனை அவரது குடும்பம் நிறைவேற்றியுள்ளது.

புனித்துடன் நான் நடித்த ராஜ்குமாரா என்ற படம் 100 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அந்தப் படத்தின் 100 நாள்கள் வெற்றி விழா இங்குதான் நடந்தது. அப்போது நான் நினைக்கவில்லை. புனித்தின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நான்வருவேன் என்று நினைக்கவில்லை.

புனித்துக்கு பதிலாக என்னை எடுத்துக்கொண்டிருக்கலாம்

புனித் என் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வருவார் என்று நினைத்தேன். ஏனென்றால் எனக்கு 67 வயது ஆகிறது. இறைவன் புனித்துக்கு பதிலாக என்னை எடுத்துக்கொண்டிருக்கலாம். புனித்தின் மரணத்தின்போது அப்படிதான் நினைத்தேன். என் வாழ்க்கையை அவருக்குக் கொடுப்பேன். எனது முழு வாழ்க்கையையும் அவரது குடும்பத்துக்கு அளிக்க நினைக்கிறேன்.

நடிகர் சரத்குமார் உருக்கமான கோரிக்கை

எனக்கு புனித்தின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தெரியும். புனித்தின் அண்ணன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ஆகியோரிடம் எனக்கு நட்புறவு உண்டு. எனக்கு முதல் சம்பளம் கொடுத்தது பெங்களூருதான். அப்போது நான் ஒரு சைக்கிள் பையன். என் வாழ்க்கை இங்கேதான் ஆரம்பித்தது. எனக்கும் கர்நாடகாவுக்கும் இடையே அப்படியொரு உறவு உண்டு,

நாங்கள் இங்கு சினிமா நட்சத்திரங்களாக வரவில்லை, நலம்விரும்பிகளாக வந்துள்ளோம். நல்ல இதயங்கள் என்றென்றும் நினைவு கூரக்கப்படும். புனித்தும் என்றென்றும் நினைவுகூரப்படுவார்” என்றார்.

புனித் ராஜ்குமாரின் தந்தை மறைந்த நடிகர் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. ராஜ் குமாரா திரைப்படத்தில் புனித் தந்தையாக சரத்குமார் நடித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க :புனித்திற்காக வீடு வாங்க சேமித்த பணத்தை உதவி செய்யும் விஷால்

Last Updated : Nov 16, 2021, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details