விஜய் தேவரகொண்டா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'கிங் ஆஃப் தி ஹில்' மூலம் வெளியிடும் முதல் படம் 'மீக்கு மாத்ரமே செப்தா (MeekuMaathrameCheptha)'. இப்படத்தை இயக்குநர் ஷாமீர் சுல்தான் இயக்குகிறார். மதன் குணாதேவா ஒளிப்பதிவு செய்கிறார்.
இதில் ஹீரோவாக இயக்குநர் தருண் நடிக்கிறார். இவர் விஜய் தேவரகொண்டாவை ஹீரோவாக வைத்து 'பெல்லி சூப்புலு' என்ற படத்தை இயக்கியவர். இப்படத்தில் கதாநாயகிகளாக நடிகைகள் வாணி போஜன், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
'தெலுங்கு பிரின்ஸ்' மகேஷ் பாபுவை ட்ரெய்லர் வெளியிட்டு விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா அழைத்திருந்தார். அதில் விஜய் தேவரகொண்டா பேசுகையில், "மீக்கு மாத்ரமே செப்தா படத்தின் ட்ரெய்லரை மகேஷ் பாபுவிடம் காட்ட விரும்பினேன். ஏனெனில் மகேஷ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே.
மகேஷ் பாபு நடித்த 'போக்கிரி' படம் தான், என் வாழ்வின் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. 'போக்கிரி' படத்தின் முதல் காட்சியை தியேட்டரில் பார்த்த போது எனக்கு ஒரு டயலாக்கும் புரியவில்லை. ரசிகர்களின் விசில் சத்தம், கொண்டாட்டம் காரணமாக ஒரு டயலாக்கும் கேட்கவில்லை.
பின் மறுபடியும் போக்கிரி படத்தை தியேட்டரில் சென்று பார்த்தேன். அப்போது தான் புரிந்தது. வாழ்ந்தால் இந்த மனிதரைப் போன்று வாழ வேண்டும். நானும் இவரைப் போன்று வாழ்வேன் என்று அப்போது உறுதி எடுத்தேன். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் போக்கிரி படஇயக்குநர் பூரி ஜெகந்நாத்தின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நான் நடிக்கிறேன். அவர் இயக்கத்தில் நான் நடிப்பது மகிழ்ச்சியே. இது என் வாழ்க்கையில் ஒரு பெரிய தருணம்" என்றார்.
முன்னதாக மகேஷ் பாபுவின் 25ஆவது படமான 'மகரிஷி' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் தேவரகொண்டாவை சிறப்பு விருந்தினராக மகேஷ்பாபு அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க: வாணி போஜனின் 'மீக்கு மாத்ரமே செப்தா' ட்ரெய்லர் வெளியீடு!