இந்திய சினிமாவை உலகம் முழுவதும் வியந்து பார்க்கவைத்த பெருமையை பெற்றுத்தந்தது 'பாகுபலி' சீரிஸ் படங்கள். தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸ் சரித்திரத்தை மாற்றியமைத்த 'பாகுபலி', 'பாகுபலி' 2 ஆகிய படங்களை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கியிருந்தார். படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்துக்கு தெலுங்கு சினிமாவின் மூத்த இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள், பின்னணி இசை பெரிய அளவில் பேசப்பட்டன.
இந்த நிலையில், 'பாகுபலி' சீரிஸ் படங்களில் இசைக்கோர்ப்பு குறித்து விளக்கும் நிகழ்ச்சி லண்டனிலுள்ள பழமைவாய்ந்த ராயல் பில்ஹார்மோனிக் ஆர்செஸ்ட்ராவில் நடைபெறவுள்ளது. இதற்காக 'பாகுபலி' படக்குழுவினர் மீண்டும் இணைகின்றனர்.
Baahubali team to be reunite on London இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் பிரபாஸ், "வரும் 19ஆம் தேதி லண்டனிலுள்ள ராயல் பில்ஹார்மோனிக் ஆர்செஸ்ட்ராவில் எம்.எம். கீரவாணியின் பாகுபலி இசைக்கோர்ப்பின் விளக்கம் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்கு பாகுபலி குழுவினர் மீண்டும் இணையவிருப்பதில் உற்சாகமாகியுள்ளேன். நீங்கள் அனைவரும் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.