மலையாளத்தில் மறைந்த இயக்குநர் சச்சி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ், பிஜுமேனன் நடிப்பில் வெளியான திரைப்படம், 'அய்யப்பனும் கோஷியும்'.
முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து உருவான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மிக எளிமையான கதையை புதிய வடிவில் சொல்லியிருந்தது, ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்தில் நஞ்சம்மாள் பாட்டி பாடிய 'கலக்காத்தா சந்தனம் மேரா வெகு வேகா பூத்திருக்கு, பூப்பறிக்க போகிலாமோ' பாடல் கேரளாவைத் தாண்டி பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
'அய்யப்பனும் கோஷியும்' மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. தற்போது தெலுங்கில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
திரிவிக்ரம் இயக்கும் இப்படத்தில் காவலராக பவன் கல்யாணும், முன்னாள் ராணுவ வீரராக ராணா டகுபதியும் நடிக்கின்றனர். சித்தாரா என்டர்டெய்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கரோனா பரவலுக்கு முன்பே இப்படத்தின் கதை விவாதம் இறுதி செய்யப்பட்டது. கதாபாத்திரங்களும் தேர்வு செய்யப்பட்டது.
தற்காலிகமாக இப்படத்திற்கு "#புரெடக்ஷன் 12" என தலைப்பிடப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு "பீமிலா நாயக்" என்ற காவலர் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கும் காட்சிகளுடன் இன்று (ஜூலை.26) ஆரம்பமாகியுள்ளது.
இதையும் படிங்க:கிராமத்துப் பாடல் பாடும் பவன் கல்யாண்