அமெரிக்காவின் பிரபல மார்வல் நிறுவனத்தின் காமிக் புத்தகங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். அந்நிறுவனம் கேப்டன் அமெரிக்கா, ஹல்க் போன்ற கதாபாத்திரங்களை மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தனர். பிற்காலத்தில் அந்நிறுவனத்தில் மார்வல் ஸ்டூடியோஸ் மூலம் சூப்பர் ஹீரோ அனிமேஷன் படங்களை தயார் செய்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் படத்தயாரிப்பதிலும் ஈடுபட தொடங்கி தங்களின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை திரைப்படமாக எடுக்கவும் தொடங்கியதோடு, சூப்பர் ஹீரோ படங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகின்றனர்.
அந்நிறுவனத்தின் தயாரிப்பில் ஸ்பைடர் மேன், பென்டாஸ்டிக் ஃபோர், அயர்ன் மேன், தி இன்கிரெடிபில் ஹல்க், அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மல்டி சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் படமான தி அவெஞ்சர்ஸ் படம் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனையும் அள்ளிக் குவித்தது.
அவெஞ்சர்ஸ் பட வரிசையில் இதுவரை மூன்று படங்கள் வெளியாகி உள்ளது. இறுதியாக கடந்தாண்டு அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படம் வெளியானது.
அந்த திரைப்படத்தில் நட்சத்திர கற்களை கைப்பற்ற வரும் வேற்றுகிரக மனிதரான தானோஸ், பல்வேறு பிரபஞ்சங்களுக்கும் சென்று அங்குள்ள அதிசயக் கற்களை கைப்பற்றி பின் அங்குள்ள மக்களை அழிப்பார்.
அவரிடமிருந்து பூமியை காப்பற்ற அயர்ன் மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், போன்ற சூப்பர் ஹீரோக்கள் முயற்சிப்பார்கள். ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும்படியாக படத்தின் கிளைமாக்ஸ் முடிந்திருக்கும். அதில், அனைத்து கற்களையும் கைப்பற்றும் தானோஸ் இறுதியாக அவர் நினைத்ததைப்போன்று பாதி மக்களை அழித்துவிடுவார்.
இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதில், தானோஸை எதிர்த்து போராடுவதற்காக எஞ்சியிருக்கும் சூப்பர் ஹீரோக்களுடன் பல புதிய சூப்பர் ஹீரோக்களும் கைக்கோர்த்துள்ளனர்.
அந்த டிரெய்லரில் சூப்பர் ஹீரோக்களின் கடந்த காலத்திலிருந்து முதல் அவர்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தார்கள் என்பதை விளக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், அனைத்து ஹீரோக்களும் தங்களின் ஒரே எதிரியான தானோஸிடம் இருந்து உலகை காக்க என்ன நடந்தாலும் பரவாயில்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறுகின்றனர்.
எனவே, இந்த படம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதை டிலெய்லேரே நமக்கு தெளிவு படுத்துகிறது.