'டைட்டானிக்'2 பில்லியன் டாலர்
ஹாலிவுட் திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் என்ற புகழை உடையவர் ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளியான 'டைட்டானிக்' திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும், உலக பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனையாக 2 பில்லியன் டாலரையும் வசூல் செய்தது டைட்டானிக்.
'அவதார்'2.788 பில்லியன் டாலர்
இந்தச் சாதனையை மீண்டும் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து முறியடித்தது. 2009இல் வெளியான 'அவதார்' படம் 2.788 பில்லியன் டாலர் வசூல் செய்து முதலிடத்தைப் பிடித்தது.
அதன்பின் வெளியான எந்தவொரு படமும் வசூலில் இத்தனை பெரிய சாதனை படைக்காததால் தொடர்ந்து அவதார் படமே முதலிடத்தில் நீடித்தது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங் இயக்குநராக ஜேம்ஸ் கேமரூன் திகழ்ந்தார்.
'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' 2.789 பில்லியன் டாலர்
இதனிடையே இந்தாண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' என்ற சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் ஹாலிவுட் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததோடு வசூலையும் வாரிக்குவித்தது.
முதலில் டைட்டானிக் திரைப்படத்தின் சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் அதைத் தொடர்ந்து அவதார் படத்தின் பத்து ஆண்டுகால சாதனையையும் தகர்த்தது. இப்படம் 2.789 பில்லியன் டாலர் வசூல்செய்து அவதார் படத்தை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்நிலையில், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 'அவதார் இரண்டாம் பாகம்' உருவாகிவருகிறது. மேலும், இப்படம் 2021 டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இது தவிர அவதார் படத்தின் அடுத்த மூன்று படங்களின் வெளியீட்டு தேதியையும் அறிவித்து அமர்க்களப்படுத்தினர்.
அவதார் 10 ஆண்டு நிறைவு
மேலும் சமீபத்தில் அவதார் படம் பத்து ஆண்டை நிறைவுசெய்ததைக் கொண்டாடும்விதமாக அப்படம் மீண்டும் திரையிடப்பட்டது. மேலும், அவதார் திரைப்படக் குழுவினர் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
இதனிடையே, இப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், அவதார் இரண்டாம் பாகம் வெளியாகி அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை விரைவில் முறியடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் கேமரூனின் இந்த அறிவிப்பால் ரசிகர்களுக்கு அவதார் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' விஷ்ணு விஷாலின் அடுத்த பட அறிவிப்பு!