சின்ன கோடம்பாக்கம் என்று சினிமா துறையினரால் அழைக்கப்படும் தென்னை நகரமான பொள்ளாச்சி விவசாய நிலங்களும், எழில் கொஞ்சும் அழகும் கொண்டு தென்னிந்திய சினிமா உலகின் மிகப்பெரிய அடையாளமாக விளங்குகிறது.
இங்கு 1960இல் இருந்து தற்போது வரை பல்வேறு படங்களுக்கான படப்பிடிப்புகள் நடந்துள்ளன. அதில் பெரும்பாலான படங்கள் நூறு நாள்களைக் கடந்து வெற்றியும் அடைந்துள்ளது. குறிப்பாக எம்ஜிஆர் நடித்த மலைக்கள்ளன், முத்துராமன் நடித்த காதலிக்க நேரமில்லை, ரஜினி நடித்த முட்டுக்காளை, ராணுவ வீரன், எஜமான், கமலின் சகலகலா வல்லவன், தேவர் மகன், அஜீத், விஜய் என தற்போதுள்ள பிரபல நடிகர்களின் படங்களுக்கும் இங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டுவருகிறது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாலிவுட் படங்களுக்கும் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியிலிருந்து சினிமா உலகிற்குச் சென்ற சாண்டோ சின்னப்பா தேவர், பி.எஸ். வீரப்பா முதல் இயக்குநர் பரதன், பவித்ரன் உள்ளிட்டோர் சினிமா துறையில் தற்போது ஒரு பெரிய அடையாளமாக மாறியுள்ளனர்.
பொள்ளாச்சியிலிருந்து சினிமா துறையில் பணியாற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பொள்ளாச்சியில் திரைப்பட துணை நடிகர்கள் சங்க தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.