அட்டகத்தி-ன்னா என்ன என்ற கேள்வியுடன் வெளியிடப்பட்ட முதல் டீஸர் மூலமாகவே படத்தில் மீதான ஆர்வத்தை எகிற வைத்தார் அறிமுக இயக்குநராக களமிறங்கிய பா. ரஞ்சித். இதற்கு அடுத்து இவர் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்கள் எளிய மனிதர்களை வஞ்சிக்கும் அரசியலை கூர்மையாக பேசி, ரஞ்சித் பிராண்ட் சினிமா என கோலிவுட்டில் தனிமுத்திரை குத்தப்பட்டது.
ஆனால், அதே எளிய மனிதர்களின் வாழ்வியலை குறிப்பாக, இளைஞர்கள் காதல் மீது வைத்திருந்த பார்வை அவர்களின் போக்கிலேயே காட்சிப்படுத்தப்பட்டிருந்த அட்டகத்தி முற்றிலும் மாறுபட்ட ஃபிளேவர்.
தமிழ் சினிமாவில் அரிதிலும் அறிதாக அவ்வப்போது சில படங்கள் கதை என்ற அடிப்படை விஷயம் இல்லாமல், ரசிக்க வைக்கும் கோர்வையான காட்சியமைப்புகளினால் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெறுவதுண்டு. அந்த வரிசையில் அட்டகத்தி படத்துக்கான கதை என்பது எல்லோர் வாழ்க்கையிலும் காதல் என்ற பெயரில் நிகழ்ந்திருக்கும் வேடிக்கையான, குறும்புத்தனமான சம்பவங்களின் தொகுப்புகள்தான். அவை அனைத்தும் இருபதாம் நூற்றாண்டு (2k கிட்ஸ்) முதல், வயதான ஆண்களையும் கண்ணாடி நோக்கி வெட்க புன்னகையுடன் நின்று, தங்களது பழைய காதல் நினைவுகளோடு அசடு வழிய வைத்தது.
தமிழ் சினிமாக்களில் காதலித்து வெற்றி பெறும் ஹீரோக்கள், காதலால் தோல்வியடையும் ஹீரோக்கள் என இந்த இருவகைகளில் சினிமாக்கள் விரல் விட்டு எண்ணாத அளவில் வந்துள்ளன. ஆனால் காதல்கள் செய்யும் ஹீரோக்களும், காதல் நிறைவேறாமல் தோல்வியுற்றாலும் கிடைத்த வாழ்க்கையை ரசித்து அனுபவித்து வாழும் சராசரி மனிதர்களை ஹீரோவாக முன்னிப்லைப்படுத்தி ’அட்டகத்தியாக இந்தப் படத்தில் தினேஷ் அமர்க்களப்படுத்தி இருந்தார்.
குறிப்பாக பெண், ஆண்களை ஏமாற்றிவிட்டாள், பெண்ணாள் ஆண் தனது வாழ்க்கையை தொலைத்தான் என்ற கிளேஸே கதைகளுக்கு மத்தியில் காதலிக்கும் பெண்ணுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தன் வழியிலேயே காதலிப்பதும், அந்தக் காதல் தோல்வியுற்றால் மனம் தளராமல் அடுத்த பெண்ணை நோக்குவதும், காதலிப்பதுமாக இருக்கும் அட்டகத்தி பசங்களின் வாழ்க்கை எதார்த்தத்தை பிரதிபலித்தது.
அட்டகத்திகளுக்கு காதலி மாறலாம். ஆனால் அவனது காதல் என்றுமே மாறாது. நேற்று திவ்யா, இன்று நதியா, நாளை யாரோ எனச் செல்லும் அவர்களின் வாழ்க்கை பயணம்தான், தற்போது அநேகம் பேரின் அன்றாட வாழ்க்கையாக இருந்திருக்க வேண்டும்.
இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், நடிகர்கள் மட்டுமல்லாமல் டெக்னிஷ்யன்களும் கூட முற்றிலும் புதுமுகங்கள் என புத்தம் புதிய கூட்டணியுடன் வெளிவந்த இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.
நகரம், கிராமம் என்ற களங்களில் கதை சொல்லப்பட்டு வந்த தமிழ் சினிமாக்களில், புறநகர் கிராமப்பகுதி மக்கள் வாழ்வியலை காலைபொழுது பேருந்து பயணத்துக்காக கால் கடுக்க காத்திருக்கும் காட்சியிலேயே படம் தொடங்குபோது, அந்தக் கூட்டத்தில் நாமும் இருக்கிறோமோ என்ற தேடலை மனதுக்குள் ஏற்படுத்தியது.