வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - மஞ்சுவாரியர் நடிப்பில் உருவான திரைப்படம் 'அசுரன்'. இந்த படம் தற்போது 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நூறாவது நாள் விழா சென்னை ரஷ்யன் கல்ச்சுரல் செண்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு, படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அசுரன் 100 வது நாள் கொண்டாட்டவிழாவில் தனுஷ் இந்த விழாவில் தனுஷ் பேசுகையில், ”நன்றி சொல்லுவதற்கான மேடை இது. வெற்றிமாறனுக்கும் எனக்கும் தயாரிப்பாளர் தாணு கொடுத்த சுதந்திரம்தான் 'அசுரன்' படம் வெற்றிபெறக் காரணம். ஜிவி பிரகாஷின் தீம் மியூசிக் என்னை வியப்பில் ஆழ்த்தியது. படத்தின் வெற்றியில் 25 விழுக்காடு காரணம் அந்த தீம் மியூசிக்தான்.
பாலுமகேந்திரா இயக்கிய 'அது ஒரு கனாக்காலம்' படத்தில் நான் நடித்தபோது வெற்றிமாறன் உதவி இயக்குநராக இருந்தார். அப்போது, தூக்கத்திலிருந்து எழுந்து அழ வேண்டிய ஒரு காட்சி எடுத்தனர். எனக்கு அதில் எப்படி நடிக்க வேண்டும் என்ற குழப்பம் இருந்தது.
அதற்காக உதவி இயக்குனராக இருந்த வெற்றி மாறனை நடித்துக் காட்டும்படி பாலுமகேந்திராவிடம் கூறினேன். வெற்றிமாறன் மிகச் சிறப்பாக நடித்துக் காட்டினார். அதன் பிறகு அதே காட்சியில் நான் நடித்தேன். இந்த இருவரில் யார் நன்றாக நடித்தது என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் என் இரண்டு பிள்ளைகளில் யார் சிறந்தவர் என்று நான் எப்படி கூறுவது. இந்த கேள்விக்கு பதில் கூற மாட்டேன் என்று சென்றுவிட்டார். அன்று முதல் நானும் இயக்குனர் வெற்றிமாறனும் சகோதரர்களாகவே உள்ளோம்.
'அசுரன்' வெளியானபோது நான் லண்டனில் இருந்தேன். படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதாக என் அம்மா ஃபோன் மூலம் கூறினார். மிகப்பெரிய வெற்றியை கொடுத்துவிட்டு தூரத்தில் இருக்கிறாயே என்று ஆதங்கப்பட்டார்.
எப்பொழுதுமே வெற்றியை தூரத்திலிருந்துதான் பார்க்க வேண்டும். தோல்வியை அருகில் சென்று பார்க்க வேண்டும். வெற்றியை தலைக்கு ஏற விடக்கூடாது. எனக்கு எதை கொடுக்க வேண்டும் என கடவுளுக்கு தெரியும். அதனால்தான் என்னை தூரத்தில் வைத்திருந்தார் என்று நான் நினைக்கிறேன். வெற்றியை தூரமாக நின்றே ரசிக்க வேண்டும்.
அசுரன் படத்தின் டப்பிங்கிற்கு மாரி செல்வராஜ் உதவியிருந்தார். அவருக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தமில்லை . ஆனால் திருநெல்வேலி உச்சரிப்பு அவருக்கு தெரிந்திருந்ததால் சென்னையிலிருந்து லண்டன் வந்து எனக்கு உதவி செய்தார். 'கைதி' படம் வெற்றிபெற்றது மகிழ்ச்சியைத் தந்தது. புதிய வகை கதையை மக்கள் விரும்பத் தொடங்கியிருப்பதை 'அசுரன்', 'கைதி' படங்களின் வெற்றி காட்டுகிறது” என்றார்.