'செக்கச் சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து அரவிந்த்சாமி நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படமும் வெளியாகவில்லை. இந்த ஆண்டு அரவிந்த்சாமி நடிப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போதுவரை பணிகள் நடைபெற்றுவரும் படம் 'வணங்காமுடி'. இயக்குநர் செல்வா இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படம் நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு வெளியாகவுள்ளது. சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா, சந்தினி தமிழரசன், தம்பி ராமையா, ஹரீஷ் உத்தமன், கணேஷ் வெங்ட்ராமன், ஓஏகே சுந்தர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் இப்படத்தை மேஜிக் பாக்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார். கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார்.
பல்வேறு காரணங்களால் முழுமை பெறாமல் இருந்த இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் முடிவடையும் என அரவிந்த்சாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள அவர், 'வணங்காமுடி' படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது எனப் பதிவிட்டுள்ளார்.