நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாஃபியா'திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதையடுத்து அவரது 30ஆவது படத்தை இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்குகிறார்.
'சினம்' என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் அருண் விஜய் காவல் அதிகாரியாக பாரி வெங்கட் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் காளிவெங்கட் நடிக்கிறார்.
இதனைடுத்து அருண் விஜய், இயக்குநர் அறிவழகன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கால் வீட்டில் இருக்கும் அருண் விஜய் தனது உடற்பயிற்சி வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அருண் விஜய் உயரத்தில் இருக்கும் உடற்பயிற்சி மெஷின் ஒன்றில் தலைகீழாக தொங்கி உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கையில் திடீரென நிலைதடுமாறி கீழே விழுகிறார். இந்த விபத்தில் அவரது முழங்காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறும்போது, ”இதுபோன்று பயிற்சியாளர் இல்லாமல் யாரும் உடற்பயிற்சி செய்ய வேண்டாம். கடந்த வாரம் நான் உடற்பயிற்சியின்போது கீழே விழுந்தேன். இதில் எனது முழங்காலில் அடிபட்டது. கடவுள் புண்ணியத்தில் தலையில் அடிபடாமல் தப்பித்தேன். எனவே தயவுசெய்து இதுபோன்ற உடற்பயிற்சியை பயிற்சியாளர்கள் இல்லாமல் செய்ய வேண்டாம்” என்றார்.