நடிகர் அருண் பாண்டியன் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் இணைந்து 'ஹெலன்' என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான 'அன்பிற்கினியாள்' படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் அருண் பாண்டியனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது குறித்தும் அதைத் தொடர்ந்து அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை குறித்தும் கீர்த்தி பாண்டியன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் உருக்காமான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், " கரோனா இரண்டாவது அலையைச் சுற்றியிருக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் நடுவில் ஒரு நாள் இரவில் அப்பா லேசான நெஞ்சுவலி, தூங்க முடியவில்லை என்று சொன்னார். அவரை அவசர சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றோம். எல்லாம் சரியாக இருந்தது. மருத்துவர் அன்றிரவு மருத்துவமனையில் தங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றார். அடுத்த நாள் அப்பாவுக்கு கரோனா தொற்று உறுதியானது.
திருநெல்வேலியில் வீட்டுத் தனிமையில் அவரை வைக்க முடிவு செய்தோம். முதல் ஏழு நாட்கள் அங்கேயே மருத்துவ உதவி கிடைக்கும் படி ஏற்பாடு செய்தோம். அந்த 15 நாட்கள் எங்களை அதிகம் பயமுறுத்தியது. ஏனென்றால் அப்பாவுக்கு சர்க்கரை வியாதி உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்கு கரோனா தொற்று தீவிரமாகப் பரவில்லை என்று நினைக்கிறேன்.
நெஞ்சுவலிப் பிரச்சினையைக் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று அப்பா உறுதியாக இருந்தார். கரோனா தொற்று நீங்குவதற்கு காத்திருந்தார். தொற்று இல்லை என்று தெரிந்து ஏழு நாட்களுக்குப் பிறகு மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனைக்கு முழு இதய பரிசோதனை செய்து கொள்ள அப்பா சென்றார். ஆஞ்ஜியோகிராம் சோதனையில் அப்பாவுக்கு இதயத்தில் பல அடைப்புகள் இருப்பதும் அதில் இரண்டு அடைப்புகள் 90 விழுக்காடு தீவிரமடைந்தால் உடனடி சிகிச்சை தேவை என்பதும் தெரிய வந்தது. நாங்கள் சரியான நேரத்துக்கு வந்தாக மருத்துவர்கள் கூறினார்கள்.