அல்லு அர்ஜூன் நடித்த அலா வைகுண்டபுரம்லோ படத்தில் அர்ஜூன் ரெட்டி 2 குறித்த ரெபரன்ஸ் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் சங்கராந்தி வெளியீடாக திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த படம் அலவைகுண்டபுரம்லோ. அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தில் காதல், பாசம், குடும்ப செண்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் கலந்த ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதையடுத்து இந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், நீச்சள் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் சகோதரர் சுஷாந்தை (சுமந்த்) சந்திக்கும் பந்து (அல்லு அர்ஜூன்) குறும்படம் எடுத்திருப்பதாக்க கூறி அந்த வீடியோவைக் காட்டி அவரை மிரட்டுகிறார்.
பந்து காண்பிக்கும் வீடியோவில் பால்கனி மாடியில் நின்றுகொண்டு மதுபாட்டிலை திறந்து ராவாக குடிக்கும் சுஷாந்த், இரண்டு சிகரெட்டுகளை பற்ற வைக்க, பின்னணியில் அர்ஜூன் ரெட்டி படத்தின் பின்னணி இசை ஒலிக்கிறது. இந்த வீடியோக் காட்சிகளைப் பார்த்து படத்துக்கு அர்ஜூன் ரெட்டி 2 எனத் தலைப்பு வைத்துள்ளேன் என்று கூறுகிறார்.
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2017இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அர்ஜூன் ரெட்டி. இந்தப் படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் ஏராளமாக இருந்த போதிலும் படத்தின் திரைக்கதை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
தமிழ் சினிமாவில் இதயம் முரளி போல் என்ற சொல்லாடலைப் போன்று, தெலுங்கில் தற்போது அர்ஜூன் ரெட்டி ஹீரோ என்ற பேச்சு உலா வந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து அதை முன்னிருத்தும் வகையில் அமைந்திருந்த இந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தக் காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், இருந்திருக்கலாம், வேண்டாம் என்ற இருவேறு கருத்துகளையும் வெளிபடுத்தியுள்ளனர்.