அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'மாஃபியா' திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து 'குற்றம் 23' படத்தின் வெற்றிக்குப் பிறகு அருண் விஜய் - இயக்குநர் அறிவழகன் மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகள் நடைபெற்றது.
ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இது அருண் விஜய்யின் 31ஆவது படம் என்பதால் தற்காலிகமாக '#AV31' என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் அருண் விஜய்யுடன் ரெஜினா, ஸ்டெஃபி பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேமரா புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, "பல நாட்களாக உன்னைப் பார்க்க ஏங்கி இன்று உன்னைப் பார்க்கிறேன். ஆம் காலம் நம் இருவரையும் அவ்வப்போது பிரிக்கிறது. உன்னை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தை அது அதிகரிக்கிறது. ஆனால் உன் மீதான என் அன்பு என்றும் நீடிக்கும். ஏனென்றால் நான் யார், நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்பதை காட்டியது நீதான். அதிக அன்புடன் எனது தாகம் தொடர்கிறது" என பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆக்ஷன் நிறைந்த இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. கடுமையாக உடற்பயிற்சி செய்தேன். இந்த அற்புதமான குழுவுடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் தனித்துவமான அனுபவத்தை தர நாங்கள் அனைவரும் முழு உழைப்பையும் தருகிறோம்" என ட்வீட் செய்துள்ளார்.