இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் 'தேவசேனா' கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'பாகமதி' படத்திற்கு பின் திரையுலகிலிருந்து விலகியிருந்தார்.
தற்போது அனுஷ்கா, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘நிசப்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனுஷ்கா, நடிகர் மாதவனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தை பீப்புள் மீடியா ஃபேக்ட்ரி - கோனா ஃபிலிம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாய் பேச முடியாத ஓவியர் சாக்ஷி கதாபாத்திரத்தில் அனுஷ்காவும், ஆண்டனி என்னும் பிரபல இசைக்கலைஞர் கதாபாத்திரத்தில் மாதவனும் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு , இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மர்மம் நிறைந்த கொலை வழக்கு ஒன்றை வாய் பேசமுடியாத அனுஷ்காவை வைத்து அஞ்சலி கண்டுபிடிப்பது போன்று காட்சி அமைந்துள்ளது.
இதையும் வாசிங்க: #HBDAnushkaShetty: 'அழகே பொறாமைப்படும் பேரழகி ஸ்வீட்டி'