ஒரு காலத்தில் சினிமாவில் என்ன சார் கதை என இயக்குநர்களிடம் கேட்க கதாநாயகிகள் எப்போதும் அனுமதிக்கப்பட்டதே கிடையாது. படத்துல ஐந்து சாங் மேடம் ஃபர்ஸ்ட் ஹாஃப்ல ஃபுல்லா நீங்க வர்றீங்க. மொத்தம் இத்தனை நாட்கள் தேவை என்று கதை விவாதத்தை நடத்துவார்கள் இயக்குநர்கள். இந்த வழக்கத்தை மாற்ற ஒரு நாயகி வருவார்.
ஒரு ஊருல ஒரு ராஜா அல்லது ஹீரோ... என்று கதையைத் தொடங்கிய இயக்குநர்கள் எங்கள் தலைவர் படம் இன்னைக்கு ரிலீஸ் எனக் கொண்டாடிய ரசிகர்களை, ஒரு ஊருல ஒரு ராணி அல்லது கதாநாயகி என்று இயக்குநர்கள் கதைசொல்லும் விதம், இன்னைக்கு எங்கத் தலைவி படம் ரிலீஸ் என ரசிகர்கள் சொல்லும்படி டிரெண்டை மாற்றிய கதாநாயகிகளில் முக்கியமானவர் நடிகை அனுஷ்கா.
பாகுபலியில் 'அழகே பொறாமைப்படும் பேரழகி' என ரம்யா கிருஷ்ணன் அனுஷ்காவை பார்த்து சொன்னது கச்சிதமாகப் பொருந்தும்.
2006ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'ரெண்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனுஷ்கா. அப்படத்திற்கு பின் டோலிவுட் சினிமாவிற்கு சென்றவர் மீண்டும் சில ஆண்டு இடைவெளிக்குப் பின் வந்தார்.
நம்ம உலக அழகி ஐஸ்வர்யா ராயை தந்த மங்களூருதான் ஸ்வீட்டி அனுஷ்காவின் பூர்வீகம். யோகா ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய அனுஷ்காவிற்கு நாகர்ஜுனாவின் அறிமுகம் கிடைத்தது. பின்பு அவருடைய அறிவுரைப்படி தெலுங்கு சினிமாவில் நடிக்க கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் முதலில் இவரை பார்த்த தயாரிப்பாளர்கள் இந்த மூஞ்சியெல்லாம் சினிமாவுக்கு தேவைப்படாது என்று ஒதுக்கிவைத்தனர். ஆனால் மனம் தளராமல் முயற்சி செய்துகொண்டிருக்கையில் 'சூப்பர்' படம் இவர் கையில் கிட்டியது. அதன்பிறகு வந்த படங்களில் கிளாமர் ரோல்களே கிட்டின. தொடர்ந்து தொட்டதெல்லாம் ஹிட் அடிக்க ஆரம்பித்தன.
பின் 'அருந்ததி' படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அரக்கனை துவம்சம் செய்ததைக் கண்ட டோலிவுட் வட்டாரம் அவரை விஜயசாந்தி நற்காலியில் அமரவைத்து அழகு பார்த்தது. அந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டது. இதைப் பார்த்த கோலிவுட் வட்டாரம் இவரை ஒதுக்குவது நல்லதல்ல எனக் கருதி அவரை அரவணைத்துக்கொண்டது.
அனுஷ்கா இந்த லெவலில்தான் நடிப்பார் என வரையறை கிடையாது. 'அருந்ததி'யில் விவேகம், 'வானம்' சரோஜா பாலியல் தொழிலாளி, 'தெய்வத்திருமகள்' வக்கீல் அனுராதா, ராணி ருத்ரமாதேவி வீரம், பாகுபலி தேவசேனா, பாகமதி சஞ்சலா ஐஏஎஸ் என இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் வெரைட்டி.
இதில் அவர் நடிப்பில் வெளியான இஞ்சி இடுப்பழகி படத்தின் கதாபாத்திரத்திற்காக கிட்டத்தட்ட 17 கிலோ எடை கூட்டினார். இந்திய சினிமா வரலாற்றில் எந்தக் கதாநாயகியும் எடுக்க தயங்கும் முடிவை தில்லாக எடுத்தார். பின் பாகுபலி படத்திற்காக எடை குறைக்க வேண்டியிருந்தது. அதையும் செய்தார். பாகுபலி முதல் பாகத்தில் கையில் விலங்குடன் இருந்த தேவசேனாவை கண்டு வெம்பிய ரசிகர்கள் பாகுபலி 2வில் இளவரசி தேவசேனா குதிரையில் ஏறி வாள் சுழற்றி சண்டையிட்டதைக் கண்டு குஷியாகினர். பாகுபலியில் அவர் செய்த வாள் சண்டையின் நேர்த்தியை வேறு ஒரு நடிகர், நடிகையிடமும் பார்க்க முடியாது.
பாகுபலி 2-வில், ’என் வாளை அனுப்பிவைக்கிறேன். உங்கள் மகனை அலங்கரித்து என் வாளுக்கு தாலி கட்டவைத்து அவனை குந்தல தேசத்துக்கு அனுப்புங்கள் நான் பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன்’ என்று அனைவரும் அஞ்சும் ராஜமாதாவுக்கே கடிதம் எழுதி குந்தலதேசத்து யுவராணியாக தேவசேனா மெர்சல் காட்டியிருப்பார்.
அனுஷ்காவின் வெற்றிக்கு ஒரு காரணம் இருக்கிறது. அவரைப்பற்றிய எல்லாச் செய்திகளிலும் காணப்படும் பொதுவான விஷயம்தான். அதாவது எந்த வேலை செய்தாலும் சரி, எந்த வேலையை கொடுத்தாலும் சரி 'ஜஸ்ட் லைக் தட்' என டீல் செய்ய மாட்டார். அதற்கென முழு ஈடுபாட்டோடு செய்வார்.
முக்கியமாக, அவரது திரைப்பயணத்தில் தாண்டவம் திரைப்படத்திற்கு தனி இடம் உண்டு. ஒரு பாதி கதவு நீயடி பாடலில் அவர் விக்ரமிடம் காட்டும் சின்னச் சின்ன முக பாவனைகளில் பல உணர்ச்சிகளை வெளிக்காட்டியிருப்பார். அதிலும், கண்ணை மூடும்படி தனது கண்களை சிமிட்டி காட்டுவது ஒரு கண்ணை திறந்துகொண்டு சிரிப்பது, விக்ரமின் கண்களை சோதனை செய்யும்போது கண்ணை சிமிட்டக்கூடாது என கண்களின் செய்கைகள் மூலம் செய்துகாட்டுவது என தனது கண்களை நடிக்க வைத்திருப்பார் அனுஷ்கா.
அனுஷ்காவிடம் ரசிக்க ஏதோ ஒன்று இருக்கிறது. திறமையும், குழந்தைத்தனம் கொண்ட அந்த அழகும் மற்றவர்களிடம் காட்டும் அன்பும்தான் அனுஷ்கா. ஹீரோவை அண்ணனாக, தலைவராகப் பார்க்கும் ரசிகர்கள் உண்டு. ஆனால் ஹீரோயினை அவரது அழகைத் தாண்டி ரசிக்கிறார்கள் என்றால் அது அனுஷ்காதான்.
இசைவெளியீட்டு விழாவில் அனுஷ்கா ஒவ்வொருவக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும். இது ஒருவருக்கொருவர் மாறுபடும். அழகை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் பார்க்கின்றனர். ஆனால் அனுஷ்காவோ அழகை உடல் தோற்றத்தில் பார்ப்பதில்லை. ஆரோக்கியத்திலும் ஆனந்தத்திலும் அழகு இருப்பதாகக் கூறியிருந்தார்.
ஒன்று மட்டும் நிச்சயம். அனுஷ்கா குண்டாக இருக்கலாம், வயதாகலாம். ஆனால் அவர் அழகு மட்டும் குறையவே குறையாது. அவர் கூறியது போல் அழகு கண்களிலும், மூக்கிலும், உடலிலும் இல்லை. இதயத்தில் இருப்பது. அவர் வேலையில் அர்ப்பணிப்போடு இருப்பது. வந்தா நடிப்பேன்... இல்லைன்னா ஒதுங்குவேன் என தில்லாக இருந்த ஸ்வீட்டிக்கு தற்போது சில படங்களில் கௌரவ வேடமும் ஓவியர் சாக்ஷியாக நடிக்கும் நிசப்தம் படமும் தற்போது கைவசம் உள்ளது.
அழகான மகாராணி தேவசேனா, குண்டுபெண் ஸ்வீட்டி, வாள் வீசி சண்டையிடும் ராணி ருத்ரமாதேவி, வானம் சரோஜா, தெய்வத்திருமகள் அனுராதா என வெரைட்டி காட்டும் அனுஷ்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!