ஏ.ஆர். முருகதாஸின் 'தர்பார்' படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் 'சிறுத்தை சிவா' இயக்கும் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 168ஆவது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இசையமைக்கிறார்.
'அண்ணாத்த' படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து சமீபத்தில் அறிவித்தார். மேலும் தான் நடித்துவரும், 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பு 40 விழுக்காடு மீதம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார்.
இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் ரஜினிக்கு பரிசாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவமான சன்பிக்சர்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பேசிய சிவா, பிறந்தநாள் கொண்டாடும் ரஜினி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள். டிசம்பர் 15ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறோம் இது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது என தெரிவித்துள்ளார். இதனை ரஜினி ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.