நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணத்தைப் பிகார் காவல்துறையினர் மற்றும் மும்பை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக சுஷாந்தின் தந்தை பிகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து பணப் பரிவர்த்தனை குறித்து அமலாக்கத் துறை சுஷாந்த் சிங்கின் காதலி ரியா உட்பட பலரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில் ரியா, மகாராஷ்டிராவில் உள்ள, நடிகை அங்கிதா புதிய பிளாட்டின் வங்கிக் கடனை சுஷாந்த் செலுத்தியதாகக் கூறினார்.
இந்நிலையில் நடிகை அங்கிதா லோகண்டே, சுஷாந்த் தனது பிளாட்டின் வங்கி கடனை செலுத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வங்கி கணக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், "இது தான் எனது வங்கிக் கணக்கு அறிக்கை. (01/01/19 முதல் 01/03/20 வரை) மாதாந்திர அடிப்படையில் எனது கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட மாதத்தவணை (ஈ.எம்.ஐ) இதுதான். இதுதவிர நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடிகர் சுஷாந்த் சிங்கும், அங்கிதாவும் காதலித்து வந்ததாக, கூறப்படுகிறது.