விஜய் நடிக்கும் 'மாஸ்டர்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'வாத்தி கம்மிங்' மார்ச் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது.
லோக்கலான வரிகளில், லோக்கல் குத்தாக அமைந்திருக்கும் 'வாத்தி கம்மிங்' பாடலை இசையமைப்பாளர் அனிருத், கானா பாலசந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலை எழுதியிருப்பதும் கானா பாலசந்தர்.
'மாஸ்டர்' படத்தில் பேராசிரியராக விஜய் நடித்துள்ள நிலையில், அவரது வருகையை முன்னிட்டு இந்தப் பாடல் படத்தில் இடம்பெறும் எனத் தெரிகிறது. 'பெரட்டி விடு செதற விடு' பிஜிஎம்க்கு இசையமைப்பாளர் அனிருத் ஒரு கையை மட்டும் அசைத்து நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், இந்த நடன சேலஞ்சை ஏற்றுக்கொண்டு நீங்களும் உங்களது வீடியோக்களை பதிவிடுங்கள் என்று பதிவிட்டார்.
இவரின் இந்த சேலஞ்சை பலரும் ஏற்று தங்களது நடன வீடியோவை பதிவிட்டிருந்தனர். மாஸ்டர் படத்தில் நடித்த சாந்தனுவும், தனது மனைவி கிகியுடன் அவர்கள் நடத்திவரும் நடனம் பயிலும் மாணவர்களும் நடனமாடி அசத்தியிருந்தனர். இவரையடுத்து தொகுப்பாளினி பாவனா தனது தோழி ஒருவருடன் 'வாத்தி கம்மிங்' பாடலுக்குப் பரதநாட்டியம் ஆடியிருந்தார்.
இந்நிலையில் கைகள் இரண்டும் இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இந்த வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உங்களின் இந்த அற்புத திறமைக்கு கடவுள் ஆசீர்வதிப்பாராக என ட்வீட் செய்துள்ளார்.