பூமியின் செயல்பாட்டில் மிக முக்கியமான உயிரினங்களில் தேனீக்களும் ஒன்று. இதனை உணர்த்தும் விதமாக உலகம் முழுவதும் மே 20ஆம் தேதி சர்வதேச தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தேனீக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிகை தேனீக்கள் குறித்த முக்கியத்துவம், விழிப்புணர்வு குறித்த புதுமையான போட்டோ ஷூட் ஒன்றை செய்திருக்கின்றது.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் உடலில் சுமார் 18 நிமிடங்களுக்கு நூற்றுக்கணக்கான தேனீக்களை பரவவிட்டு புதுமையான முறையில் இந்த போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
இப்புகைப்படத்தில் வெள்ளை நிற உடை அணிந்து கொண்டிருக்கும் ஏஞ்சலினா, நேராக கேமராவை பார்த்தப்படி போஸ் கொடுத்துள்ளார். ஏஞ்சலினா உடலில் தோள்பட்டை, மார்பு, முகம் ஆகியவற்றில் தேனீக்கள் மொய்க்கின்றன.
போட்டோ ஷூட்டில் ஏஞ்சலினா ஜோலி இந்த புகைப்படத்தை பிரபல புகைப்படக்கலைஞர் டான் விண்டர்ஸ் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "18 நிமிடங்கள் வரை ஏஞ்சலினாவின் உடலில் தேனீக்களை மொய்க்க விட்டு போட்டோ ஷூட் நடத்தினோம். இந்தப் பெருந்தொற்று காலத்தில் இதை முடிப்பது எங்களுக்கு மிகச் சவாலான காரியமாக இருந்தது. இருப்பினும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இதை செய்து முடித்தோம்.
40 ஆண்டுகளுக்கு முன்னர் ரிச்சர்ட் அவெடன் என்பவர் எடுத்த 'பீ கீப்பர் போர்ட்ரைட்' என்னும் படத்தை முன்மாதிரியாக வைத்து, அதே முறையைப் பின்பற்றி இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளோம்" என்றார். இந்தப் படப்பிடிப்பின்போது ஏஞ்சலினா ஜோலி தவிர மற்ற அனைவரும் பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்தனர்.