2010ஆம் ஆண்டு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் அங்காடிதெரு வெளியாகி பெரும் வெற்றிப்பெற்றது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை சிந்து தொடர்ந்து சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், இவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் சிகிச்சைக்குத் தேவையான பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மருத்துவ உதவிக்காக சிரமப்படும் இவர் பொருளாதார உதவி கேட்டு இன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதில், சினிமா துறையில் தான் சம்பாதித்த பணம் குடும்பத்திற்கு கூட செலவிடாமல் பொது சேவைக்கு பயன்படுத்தியுள்ளேன். தன்னுடன் நடித்த சின்னச் சின்ன நடிகர்கள் கூட தனக்கு மருத்துவ உதவி செய்தனர். ஆனால் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்கள் என்று கூறப்படும் ரஜினிகாந்த், அஜித், விஜய், சிவகார்த்திக்கேயன் ஆகியோரை பலமுறை தொடர்பு கொண்டும் எந்தப் பயனுமில்லை. அவர்கள் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுகிறார்கள் என்ற பொய்யான பிம்பம் உள்ளது. அவர்கள் உண்மையில் உதவுவதில்லை.
நடிகர் அஜித் அனைவருக்கும் உதவி செய்கிறார் என்று கூறப்படுகிறது. அதிலும் உண்மையில்லை. சிகிச்சைக்காக உதவி செய்யுமாறு கோரிக்கை வைக்க அவரை தொடர்புகொள்ள பலமுறை முயன்றும், அவரது மேனேஜர் நடிகர் அஜித்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டார்.