சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்டாகுவது வழக்கம். அந்த சேலஞ்ச் சாமானிய மக்கள் தொடங்கி நடிகர், நடிகைகள் என்று பலரும் செய்கின்றனர். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியாகி வைரலாகிறது.
ஆனால் பலருக்கும் நாம் ஏன் அந்த சேலஞ்சை செய்கிறோம் என்று தெரியாமல் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதிதாக தொடங்கியுள்ளது தான் கருப்பு- வெள்ளை சேலஞ்ச். ஆம்.. இன்ஸ்டாகிராம் தளத்தில் நடிகர்-நடிகைகள் பலரும் தங்களது கருப்பு-வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டு #challengeaccepted என்ற ஹேஷ் டாக்கை குறிப்பிட்டுள்ளனர்.
பலரும் இதை ஒரு நகைச் சுவையாகவே பதிவிடுகின்றனர். ஆனால் இந்த சேலஞ்ச் உருவாக்கப்பட்ட காரணத்தை நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு துருக்கி நாட்டைச் சேர்ந்த பினார் குல்டெக்கின்(pinar gultekin) என்ற பெண்ணின் கருப்பு- வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டுப் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "பினார் குல்டெக்கின் (pinar gultekin) என்ற பெண் ஆண் நண்பரால் கொலை செய்யப்பட்டார். அவரின் இறப்பிற்கு நியாயம் கிடைக்கவே அந்நாட்டிலிருந்து, இந்த #challengeaccepted சவால் உருவாக்கப்பட்டது. ஒரு நண்பர் உங்களை நாமினேட் செய்தார்கள் என்பதற்காக அதன் உண்மைத் தன்மையை அறியாமல் செய்யாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.