கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனால் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் சமூகவலைத்தளங்கள் மூலம் குடும்பத்தினருடனும் தங்களது நேரத்தை செலவழித்து வருகின்றனர். இருப்பினும் ஐபோன் மூலம் எடுக்கப்பட்ட குறும்படத்தை ஆதவ் கண்ணதாசன் இயக்கியுள்ளார். 'லாக்டவுன்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுகுறித்து ஆண்ட்ரியா கூறுகையில், "ஆதவ் கண்ணதாசனை எனக்கு ஓராண்டுக்கும் மேலாகத் தெரியும் அவரிடம் நடிப்பை விட எழுத்தில் கவனம் செலுத்துமாறு நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். காரணம் எழுத்தில் தான் அவரது உண்மையான திறமை இருக்கிறது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆரம்ப நாள்களில் இந்தக் குறும்படம் குறித்து ஆதவ் என்னிடம் சொன்னார். இப்படத்தின் சிறப்பம்சமே இது முழுக்க முழுக்க ஐபோனில் எடுக்கப்பட்டது என்பதே. படத்தின் தரம் குறித்த விஷயங்களில் சமரசம் செய்ய முடியாது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது. தற்போதைய நிகழ்வுகளை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்ல முயற்சி செய்திருக்கிறோம்." என்று கூறினார்.
ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் நிதின் ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆதவ் கண்ணதாசன் கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆவார் இவர் பரத் நடிப்பில் வெளியான 'காளிதாஸ்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முழுக்க முழுக்க ஐபோனில் எடுக்கப்பட்ட 'லாக்டவுன்' குறும்படம் நாளை (ஏப்.29) வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.