குழந்தைப் பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில் குழந்தைக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறும், எமி ஜாக்சன் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த மாடலான எமி ஜாக்சன், தமிழில் ஆர்யா நடிப்பில் வெளியான 'மதராசப்பட்டினம்' திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன்பின்னர் 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் நடித்த அவர் விக்ரமுடன் தாண்டவம், ஐ, விஜய்யுடன் 'தெறி' போன்ற படங்களிலும் நடித்தார்.
கடைசியாக அவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தில் ரஜினியுடன் இணைந்து பெண் ரோபோவாக நடித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோவைக் காதலிப்பதாக எமி ஜாக்சன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த எமிக்கு, காதலனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அவ்வப்போது தனது கர்ப்பகால தருணங்களை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு வந்தார் எமி. இதையடுத்து கடந்த மாதம் இவர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து தாயாகினார். குழந்தைக்கு 'ஆண்டிராஸ்' எனப் பெயரிட்டார்.