இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவரும் பிரபல பாலிவுட் நடிகருமான அமிதாப் பச்சன் திரைத் துறையில் இன்றுடன் 50 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள நிலையில், அமிதாப்பின் மகனும், பிரபல பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் தனது தந்தைக்காக அன்பு ததும்பும் அழகான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமிதாப்பின் பழைய கறுப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அதனுடன் நீண்ட செய்தி ஒன்றை இட்டுள்ளார் அபிஷேக். அந்தப் பதிவில், ”ஒரு மகனாகச் சொல்லவில்லை, ஒரு நடிகனாகவும், உங்கள் விசிறியாகவும் சொல்கிறேன். உங்களின் வளர்ச்சியை உடனிருந்து பார்த்தது எனக்குக் கிடைத்த பெரும்பேறு. உங்களை ரசிப்பதற்கு, உங்களிடம் கற்பதற்கு, எல்லாவற்றையும் தாண்டி உங்களைப் பாராட்டுவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “வேறுபட்ட தலைமுறையைச் சேர்ந்த சினிமா காதலர்களும், நீங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்த பெருமையைப் பெற்றிருக்கிறார்கள்! திரைத் துறையில் ஐம்பது வருடங்களைப் பூர்த்தி செய்ததற்கு வாழ்த்துகள் அப்பா!” என்று கூறி மற்றொரு பதிவையும் இட்டுள்ளார்.
பாலிவுட் செஹன்ஷா என அனைவராலும் வாஞ்சையோடு அழைக்கப்படும் 77 வயதான நடிகர் அமிதாப் பச்சன், தன் திரையுலக வாழ்க்கையை 1969ஆம் ஆண்டு ’சாத் ஹிந்துஸ்தானி’ என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். தொடர்ந்து 1970களில் சஞ்சீர், தீவார், மாபெரும் வெற்றிப்படமான ’ஷோலே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் வெளிச்சற்கு வந்து தனது வெற்றிப்பயணத்தைத் தொடங்கினார்.