2002ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி 'துள்ளுவதோ இளமை' எனும் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் போஸ்டரில் இயக்கம்-கஸ்தூரி ராஜா, இசை-யுவன் சங்கர் ராஜா என்ற இரண்டு பெயர்கள் மட்டுமே, அப்போது தமிழ் சினிமா ரசிகனுக்கு அறிமுகமாக இருந்தது. படத்தில் நடித்தவர்களும், தொழில்நுட்ப கலைஞர்கள் பெரும்பாலும் புதுமுகங்களே. இந்தப் படம் தியேட்டரை விட்டு இரண்டு நாளில் ஓடிவிடும் என்று கிண்டல் செய்தவர்களை ஓடி ஒளியச் செய்தது இப்படத்தின் மகத்தான வெற்றி.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் உளவியல், உடல் ரீதியான மாற்றம், பெற்றோர்களின் கடமை, சமூகத்தின் பங்கு ஆகியவற்றை இளமை தூக்கலோடு சொல்லிய படம் இது. கிளாஸை 'கட்' அடித்து விட்டு பள்ளி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டரில் குவிந்து, படத்தை பெரிய வெற்றிப் படமாக மாற்றினர். இதன் மூலம் செல்வராகவன் எனும் மகத்தான இயக்குநரும், தனுஷ் என்கிற அற்புத நடிகரும் சினிமா உலகிற்கு கிடைத்தனர். இந்த படத்தை தொடர்ந்து இருவரும் தமிழ் சினிமாவில் செலுத்தி வரும் ஆளுமை உலகம் அறிந்ததே.
இந்தப்படம் வெளியாகி நேற்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டராக மாறிய 'துள்ளுவதோ இளமை' படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். "அதுக்குள்ள 17 வருடங்கள் ஓடிடுச்சா என்ன. நடிகனாக்கூட தாக்குப் பிடிப்பேனான்னு தெரியாம இருந்த ஒரு சிறு பையனுக்கு உங்க மனசுல இடம் கொடுத்த நாள் இது" என்று உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
கடிதத்தில், "துள்ளுவதோ இளமை 2002ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி வெளியானது. என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிய நாள் அது. உண்மையிலே 17 ஆண்டுகள் ஆனதா? நேற்று தான் அந்த படம் ரிலீஸானது போன்று பீல் ஆகிறது. ஒரு நடிகனாக முடியுமா என்று தெரியாத ஒரு சிறு பையனுக்கு உங்க மனசுல இடம் கொடுத்த நாள் இது. என் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கும், என்னோட தோல்விகளையும், வெற்றிகளையும் என்னுடன் துணையா இருந்து ஆதரவாக இருந்த உங்களுக்கு என் அடிமனதில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மிகச்சிறந்த மனிதன் கிடையாது. ஆனால் உங்களுடைய ஆதரவு என்னை மேலும் உழைக்க தூண்டுகிறது. 17 வருட நிறைவையொட்டி நீங்கள் அனுப்பியுள்ள போஸ்டர்கள், வீடியோக்கள் எனக்கு அதிக ஊக்கத்தை அளித்துள்ளன. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.. நன்றி.. அன்பை மட்டும் பகிர்வோம். புதிய உலகை படைப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
துள்ளுவதோ இளமை படம் வெளியானபோது, உருவதத்தை வைத்து கேலி கிண்டலுக்கு ஆளானவர் தனுஷ். தற்போது அனைத்தையும் கடந்து நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகங்களோடு சினிமாவில் இயங்கி வருகிறார். வெற்றிமாறனுடன் `அசுரன்' மற்றும் துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் தலைப்பிடாத படம், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் `ராட்சசன்' ராம்குமார், 'பரியேறும் பெருமாள்' புகழ் மாரி செல்வராஜ் ஆகியோரின் இயக்கத்தில் ஒரு படம் என்று பரபரப்பாக இயங்கி வருகிறார் தனுஷ்.