தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பிரேமம்' க்ளைமாக்ஸ்: மலருக்கு நினைவு திரும்பியது ஜார்ஜுக்கு தெரியும் - இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் - மலருக்கு நினைவு திரும்பியது ஜார்ஜுக்கு தெரியும்

நிவின் பாலியின் 'பிரேமம்' படத்தில் இறுதி காட்சியில், மலருக்கு நினைவு திரும்பியிருப்பது ஜார்ஜுக்கு தெரியும். இதை வசனங்களில் நாங்கள் சொல்லவில்லை. சைகையிலும் இசையிலும் காட்டியிருப்போம் என அப்படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

Premam
Premam

By

Published : Jun 5, 2021, 11:01 PM IST

மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான 'பிரேமம்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

'பிரமேம்' படம் ஆரம்பம் முதல் க்ளைமேக்ஸ் வரை காட்சிகள் முழுவதும் காதல் மழை பெய்து கொண்டே இருக்கும். பள்ளிப் பருவ பையானாக வரும் ஜார்ஜ் (நிவின் பாலி), மேரி (அனுபமா பரமேஸ்வரன்) பின்னால் சுற்றுவது, கல்லூரி பருவ காலத்தில் தெனாவட்டுடனும் நண்பர்களுடன் லூட்டி அடித்து சுற்றும் ஜார்ஜ், மலர் (சாய் பல்லவி) டீச்சரை பார்த்து காதல் வயப்படுவது, இறுதியாக வாழ்க்கையின் எதார்தத்தை புரிந்து கொண்டு பேக்கரி கடை உரிமையாளரான ஜார்ஜ், செலினை (மடோனா செபாஸ்டியன்) திருமணம் செய்து கொள்ளவது என நிவின் பாலி படம் முழுவதும் மாற்றங்களைக் கொடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பதில்

இளைஞர்களின் மனதை புரிந்துக்கொண்ட அல்போன்ஸ் புத்திரனின் கதையை உள்வாங்கி திரையில் பிரதிபலித்த நிவின் பாலி, அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என 'பிரமேம்' பட்டாளங்கள் ரசிகர்களை காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்தனர்.

படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆனநிலையிலும் 'பிரேமம்' மலர் டீச்சரின் கதாபாத்திரம் அவ்வளவு எளிதில் ரசிகர்கள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். படத்தின் பாதியில், ஒருவிபத்தின் மூலம் தனது நினைவுகளை இழக்கும் மலர் டீச்சர், படத்தின் க்ளைமாக்ஸில் ஜார்ஜின் திருமணத்திற்கு வருகை தருவார். அப்போது ஜார்ஜ் சந்தோஷமாக இருக்கிறான். எனவே அவனிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என மலர் தன்னுடன் வரும் நபரிடம் கூறுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

தற்போது இந்த காட்சி குறித்து சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவர் அல்போன்ஸ் புத்திரனிடம் கேள்வியெழுப்பினார். "ஒரு சந்தேகம், பிரேமம் படத்தில் ஜார்ஜிடம் எதையும் சொல்ல விரும்பவில்லை என மலர் கடைசியில் சொல்கிறாள். பல முறை இந்த படத்தைப் பார்த்த பின்பும் எனக்கு இது குழப்பமாக இருக்கிறது. அவருக்கு உண்மையில் பழைய விஷயங்கள் மறந்து விட்டதா? அல்லது வேண்டுமென்றே ஜார்ஜைப் புறக்கணிக்கிறாரா? அல்லது நினைவுகளை மீண்டும் பெற்று ஜார்ஜுக்கு திருமணம் ஆகிறது என்பதால் எதையும் சொல்லாமல் இருக்கிறாரா? உங்கள் பதிலுக்காக என் நண்பனுடன் ரூ.100 பந்தயம் வைத்திருக்கிறேன்" என பதிவிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அல்போன்ஸ் புத்திரன் கூறியிருப்பதாவது, " அவளுக்கு அனைத்தும் மறந்து விட்டது. அவளுக்கு மீண்டும் ஞாபகம் வந்தபோது அவள் அறிவழகனிடம் பேசியிருக்கலாம். அங்கு செல்லும் போது ஜார்ஜ், செலினோடு மகிழ்ச்சியாக இருப்பதை உணர்கிறாள். ஆனால் அவளுக்கு நினைவு திரும்பியிருப்பது ஜார்ஜுக்கு தெரியும். இதை வசனங்களில் நாங்கள் சொல்லவில்லை. சைகையிலும் இசையிலும் காட்டியிருப்போம்.

உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன். நீங்கள் சொன்னது போல அவளுக்குச் சமீபத்தில் நினைவு திரும்பிவிட்டது. ஆனால் ஜார்ஜுக்குத் திருமணம் என்பதால் அவள் அதைத் சொல்லவில்லை என்பதே சரி" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details