பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து கடனை வாங்கி விட்டு திருப்பி செலுத்தவில்லை. இதையடுத்து, அவர் இங்கிலாந்துக்கு தப்பி சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு தொடர் முயற்சி செய்துவருகிறது.
இதற்கிடையே, மல்லையாவின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகத்தை பிரபல எழுத்தாளர் கே. கிரி பிரகாஷ் எழுதி வெளியிட்டார். இந்நிலையில், புத்தகத்தில் வெளியான கதையை வெப் சீரிஸாக தயாரித்து வெளியிடும் உரிமையை ஆல்மைட்டி மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
இதுகுறித்து நடிகரும் தயாரிப்பாளருமான பிரப்லின் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில், " 'தி விஜய் மல்லையா ஸ்டோரி' என்ற புத்தகத்தை பிரபல எழுத்தாளர் கே. கிரி பிரகாஷ் எழுதினார். இதனை பென்குயின் இந்தியா நிறுவனம் வெளியிட்டது. இப்புத்தகத்தை தழுவி வெப் சீரிஸாக வெளியிடும் உரிமையை என்னுடைய அல்மைட்டி மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
விஜய் மல்லையாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க பிரபல பாலிவுடன் நடிகருடன் பேசிவருகிறோம், கதையை திரைக்கதையாக மாற்றும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என கவுர் தெரிவித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இளம்பெண்ணின் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு உதவிய சோனு சூட்!