பாலிவுட்டில் பிரம்மாண்டமான படங்களுக்குப் புகழ்பெற்றவர் சஞ்சய் லீலா பன்சாலி. பல வருடங்களுக்கு முன் இவர் இயக்கத்தில் சல்மான் கான் ஐஸ்வர்யாவுடன் 'ஹம் தில் தே சுக்கே சனம்' திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்திற்கு பின் பன்சாலியுடன் சல்மான்கான் பணியாற்றவில்லை.
இந்நிலையில் தற்போது 'இன்ஷால்லா' படத்தின் மூலம் சல்மான் - பன்சாலி இணைந்துள்ளனர். 'ஹம் தில் தே சுக்கே சனம்' திரைப்படம் போலவே இப்படமும் காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது. இன்ஷால்லா படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக அலியா பட் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தில் நடிப்பது குறித்து அலியா பட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறிருப்பதாவது, 'ஹம் தில் தே சுக்கே சனம்' படம் வெளியாகும் போது எனக்கு வயது 6. முதல் முறையாக நான் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்துக்குச் செல்லும்போது எனக்கு 9 வயது. அவரது அடுத்த படத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே சென்றேன். நீண்ட நாள் காத்திருப்பு இது.
கண்களைத் திறந்து கொண்டே கனவு காணுங்கள் என்று சொன்னார்கள். நானும் கண்டேன். சஞ்சயும், சல்மானும் இணையும்போது அது மாயாஜாலம். 'இன்ஷால்லா' என்ற இந்த அழகிய பயணத்தில் அவர்களுடன் இணையும் நாளுக்காகக் காத்திருக்க முடியவில்லை' என்று அதில் கூறினார்.
இது குறித்து சல்மான் கான் கூறுகையில், '20 வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் சஞ்சயும் நானும் அவரது அடுத்த படத்தில் ஒருவழியாக இணைவதில் எனக்கு மகிழ்ச்சி. அலியாவுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இன்ஷால்லா, இந்த பயணத்தில் நாங்கள் அனைவரும் ஆசிர்வதிக்கப்படுவோம்' என்று ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.