ஹைதராபாத்: அரசியல் படமாக உருவாகிவரும் 'கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்டுலு' படத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் கேரக்டர் லுக்கை இயக்குநர் ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ளார்.
திரைப்படங்களில் மட்டுமில்லாமல், நிஜ வாழ்க்கையிலும் யாரையாவது வம்பிழுக்கும் விதமாக கருத்து தெரிவித்து சிக்கலில் மாட்டிக்கொள்வதை வழக்கமாகக் கொண்ட தெலுங்கு இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு சர்ச்சை இயக்குநர் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
இவர் அரசியலை களமாக வைத்து 'கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்டுலு' என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண், பல நிஜ வாழ்க்கை பிரபலங்களின் கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன.
இதையடுத்து, படத்தின் போஸ்டர் ஒன்றை ராம் கோபால் வர்மா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதில், சர்ச்சையான கதாபாத்திரங்களை வைத்து சர்ச்சை இல்லாத படமாக உருவாகிவரும் கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்டுலு படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 27ஆம் தேதி காலை 9.36 மணிக்கு வெளியிடப்படும். அரசியவாதிகள், பத்திரிகையாளர்கள், ரவுடிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பரிசாக இந்த ட்ரெய்லர் அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.