போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. இந்த படத்தில், அஜித்துடன் நஸ்ரியா, ஹூமா குரேஷி, யோகி பாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு பூஜையை தவிர வேறு எந்த அப்டேட்டும் நீண்ட நாள்களாகியும் வராத காரணத்தால் அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் யாரைப் பார்த்தாலும் 'வலிமை' அப்டேட் கேட்டுவந்தனர்.
டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து, தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, சென்னை மைதானத்தில் வைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, சென்னை வந்த பிரதமர் மோடி, தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வானதி சீனிவாசன் என பல தரப்பினரிடம் ரசிகர்கள் வலிமை அப்பேட் கேட்க அந்தக் காணொலியும் சமூக வலைதளத்தில் வைரலாகிவந்தது.
மதுரை அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு போஸ்டர் ஒட்டினர். ஒரு கட்டத்தில் கடவுள் முருகனிடமே 'வலிமை' அப்டேட் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அளித்தனர். இதனால் கடுப்பான அஜித் அறிக்கை விடும் அளவிற்கு இப்பிரச்னை பெரிதானது.
மே 1ஆம் தேதி வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்த நிலையில், சில காரணங்களால் அதுவும் தள்ளிப்போனது.
இந்த நிலையில் அஜித்தின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா வலிமை படம் குறித்தான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, "வலிமை படத்தில் ஒரு முக்கிய சண்டைக் காட்சி எடுக்கப்பட வேண்டியுள்ளது. கதைப்படி வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய சண்டைக்காட்சி அது. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு வெளிநாடு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பு, அந்த சண்டைக் காட்சியை எடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு வேளை வெளநாடு செல்ல கட்டுப்பாடுகள் குறித்த காலத்திற்குள் தளர்த்தப்படவில்லையெனில் மாற்று ஏற்பாட்டிற்கும் படக்குழு தயாராக உள்ளது. இந்த சண்டைக்காட்சி தவிர்த்து சிறுசிறு பேட்ச் ஒர்க் மட்டுமே உள்ளது. போஸ்ட் புரொடக்ஷனை பொறுத்த வரை இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளின் பெரும்பாலானவற்றிற்கு டப்பிங் பேசி முடிக்கப்பட்டுள்ளது. பினிஷிங் டச் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். இந்த படம் திரையரங்கில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிட் காரணமாக படப்பிடிப்பில் நிறைய மாற்றங்கள் செய்யப்படவேண்டிய சூழல். கரோனா பரவல் அச்சத்தால் நிறைய மூத்த நடிகர், நடிகைகள் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள முடியாமல் போனது. எனவே அவர்களுக்காக படப்பிடிப்பு தேதி மாற்றி அமைக்கப்பட வேண்டியிருந்தது" என்றார்.
இந்த படத்தில் அஜித் சிபிசிஐடி அலுவலராக நடிப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. கரோனா பரவலின் தாக்கம் தற்போது குறைய தொடங்கிய நிலையில் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரேஷ் சந்திராவின் இந்த தகவலையடுத்து அஜித் ரசிகர்கள் ட்விட்டரில், #ValimaiUpdate என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து சமூகவலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.