ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. கரோனா தொற்று அச்சம் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஆனால் இப்படம் குறித்து நீண்ட நாள்களாக எந்தவித அப்டேட்டும் வராத காரணத்தால் அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட் கேட்டுவருகின்றனர்.
டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்து, தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, சென்னை மைதானத்தில் வைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி என காண்போரிடம் ரசிகர்கள் வலிமை அப்பேட் கேட்க அந்தக் காணொலியும் சமூக வலைதளத்தில் வைரலாகிவந்தது. ஒரு கட்டத்தில் கடவுள் முருகனிடமே 'வலிமை' அப்டேட் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அளித்தனர்.