ஆஹா (aha) தளம் தெலுங்கு பொழுதுபோக்கு உலகில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட மூன்றே மாதங்களில் ஒரு கோடி பார்வையாளர்களைப் பெற்று உலகம் முழுதும் 10 கோடி தெலுங்கு மக்களிடையே தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது.
இணைய ரசிகர்களுக்காக நேரடி தெலுங்கு கதைகளை உருவாக்கியுள்ள இந்த நிறுவனம், சுமார் 40 திரைத்தொடர்களையும் பிரபல இயக்குநர்கள் இயக்கத்தில் பெரிய நடிகர்களை வைத்து புதிய படைப்புகளையும் உருவாக்கிவருகிறது. அதேசமயம் திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களை வாங்கி டிஜிட்டல் தளத்திலும் வெளியிட்டுவருகிறது.
இந்த வகையில் முதலாவதாக நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள “லவ் ஸ்டோரி” படத்தை வாங்கியுள்ளது. மேலும் பல படங்களை வாங்கும் பேச்சுவார்த்தையில் உள்ளது.
பொழுதுபோக்கு உலகில் புதுமையைப் புகுத்தி 100 விழுக்காடு தெலுங்கு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது ஆஹா தளம்.
இது குறித்து, இந்நிறுவன பங்குதாரர் மற்றும் தலைமை அலுவலர் கிரிஷ் மேனன் கூறுகையில், "இந்தியாவில் ஓடிடி என்னும் டிஜிட்டல் திரை சந்தை புயல் வேகத்தில் வளர்ந்துவருகிறது. அதிலும் மொழிவாரியான விகிதத்தில் இத்துறைக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது.
தெலுங்கு டிஜிட்டல் உலகம் தற்போது மிகப்பெரிய சந்தைக்களமாக இருக்கிறது. இணையம் மிகப் பரவலாக இருக்கும் இன்றைய தேதியில் உலகம் முழுக்க இருக்கும் 10 கோடி தெலுங்கு மக்கள், தெலுங்கு திரைப்படங்கள், தொடர்களைக் காண்பதில் பெரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
ஆனால் தெலுங்கு மொழியில் நேரடி தொடர், கதைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு இருக்கிறது. இந்த தட்டுப்பாடுகள் இல்லாமல் தொடர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களை அளிக்கும் நிறுவனமே சந்தையில் கோலோச்சும். அந்த வகையில் மககளை “ஆஹா” நிறுவனம் வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
பிரத்யேகமாக தெலுங்கு கதைகளைத் தேடும் ரசிகர்களுக்கு 100 விழுக்காடு சென்டிமென்ட் உத்தரவாதம், ரசிகர்கள் விரும்பும் அனைத்தும், அவர்கள் நுகரக்கூடிய குறைந்த விலையில் ஆஹாவில் கிடைக்கிறது. அந்த வகையில் ஓடிடி தளத்தில் மிகப்பெரும் புரட்சியை “ஆஹா” ஏற்படுத்தியிருக்கிறது" என்றார்.