விஜய் ஆண்டனி - அருண் விஜய்யை வைத்து 'அக்னிச் சிறகுகள்' படத்தை 'மூடர் கூடம்' நவீன் இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தில் அக்ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், நாசர், தலைவாசல் விஜய், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே மற்றும் சென்றாயன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் கேரக்டர் லுக் போஸ்டர்களை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டிருந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கஜகிஸ்தான், ஐரோப்பா நாடுகளில் முதற்கட்டப் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றுள்ள நிலையில், இறுதி கட்டப் படப்பிடிப்புப் பணிகள் ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவில் நிலவும் கடும் குளிருக்கு மத்தியில் படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய் மற்றும் ஜேஎஸ்கே இருவரும் பனிப்பொழிந்து கிடக்கும் சாலை வழியாக புகைப்பிடித்தபடி நடந்து வருவது போன்ற புகைப்படத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.