'மூடர்கூடம்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்கச் செய்தவர் இயக்குநர் நவீன். இயக்குநர் மட்டுமல்லாது நடிகராகவும் வலம் இவர், 'அலாவுதீனின் அற்புத கேமரா' திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார்.
இதனிடையே விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய்யை வைத்து 'அக்னிச் சிறகுகள்' படத்தை நவீன் இயக்கி வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தில் அக்ஷராஹாசன், பிரகாஷ்ராஜ், நாசர், தலைவாசல் விஜய், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே மற்றும் சென்றாயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இரு முன்னணி நடிகர்களை வைத்து நவீன் இயக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி சீனு என்ற காபாத்திரத்திலும், அக்ஷரா விஜி என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி மற்றும் அக்ஷராவின் போஸ்டர்கள் தனித்தனியே சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சென்றாயனின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.