தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நேரடியாக ஸ்டார் விஜய் டிவியில் வெளியாகும் சமுத்திரகனி நடித்த 'ஏலே' - ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட்

'ஏலே' படத்தின் வெளியீட்டுக்கு மூன்று நாள்களே இருந்த நிலையில், புது விதிகள் தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை திரையரங்கில் வெளியிடாமல் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடும் முடிவை எடுத்துள்ளதாக பட தயாரிப்பாளர்கள் தெரிவித்து, தொலைக்காட்சி நேரடி ப்ரீமியருக்கான தேதியையும் அறிவித்துள்ளனர்.

Samuthirakani and manikandan in aelay movie
ஏலே படத்தில் சமுத்திரகனி மற்றும் மணிகண்டன்

By

Published : Feb 11, 2021, 5:06 PM IST

சென்னை:சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள 'ஏலே' திரைப்படம் பிப்ரவரி 28ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாவதாக பட தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஏலே பட தயாரிப்பாளர்கள் சார்பில், "மனித உணர்வுகளை, அதன் அழகியல்களை, உயர் தரத்தில் காட்சிப்படுத்தும் திறமைமிகு இயக்குநரும், அனைவரது மனங்களை வென்றவருமான ஹலிதா சமீம் இயக்கத்தில் சமுத்திரகனி, மணிகண்டன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ஏலே' திரைப்படத்தை தயாரித்ததில் ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனங்கள் பெருமை கொள்கிறது.

பிப்ரவரி 12 அன்று உலகம் முழுதும் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்தோம். படம் வெளியாக மூன்று நாள்கள் இருந்த நிலையில், சில ஆச்சர்யகரமான புது விதிகளாலும், தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் படத்தை திரையரங்குக்கு கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

திரையரங்குகளை தவிர்த்து இந்தப் படத்தை உலகம் முழுதும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

எனவே, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து பிப்ரவரி 28 அன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு, உலக தொலைக்காட்சிகளில் முதல்முறையாக நேரடியாக இத்திரைப்படத்தை வெளியிடுகிறோம்.

திறமையாளர்களுக்கான வாய்ப்புகளையும், ரசிகர்களுக்கான தரமான கதைகளையும் திரையரங்கு உள்பட அனைத்து தளங்களிலும் வழங்குவதில் எங்கள் நிறுவனம் எப்போதும் முனைப்புடன் செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் இயக்குநர் ஹலிதா சமீம் கூறுகையில், ” என்னுடைய 'ஏலே' திரைப்படம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை சென்றடையவுள்ளது என்பதில் பெரும் மகிழ்ச்சி. இயக்குநராக எனது பயணம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே இது என் மனதுக்கு நெருக்கமான படைப்பாக இருந்தது. தற்போது மிகப்பெரும் வெளியீடாக பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை, ஒரே நாளில் படம் சென்றடைய இருப்பதை காண மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இயக்குநர் ஹலிதாசமீம்பூவரசம் பீப்பி என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் பாராட்டுக்களை குவித்த நிலையில், சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன் நடிப்பில் 'சில்லுக்கருப்பட்டி' திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் சமுத்திரகனியை நடிக்க வைத்து 'ஏலே' என்ற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு தொடங்கியது!

ABOUT THE AUTHOR

...view details